கரோனா கற்றுத் தந்த புதுத்தொழில்!- ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் கேரள நடிகை மஞ்சு

கரோனா கற்றுத் தந்த புதுத்தொழில்!- ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் கேரள நடிகை மஞ்சு
Updated on
1 min read

கரோனா பரவல் தீவிரத்தைத் தடுப்பதற்காகக் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடையிருப்பதால் மேடை நாடகப் பெண் கலைஞர் மஞ்சு, கேரளத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

அதிகளவில் மக்கள் கூடினால் கரோனா எளிதில் பரவும் என்பதால் மக்கள் கூடுவதைத் தடைசெய்யும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் காரணமாக சினிமா திரையரங்குகள், சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மேடை நாடகக் கலைஞர்களும், இன்னிசைக் கச்சேரி நடத்துபவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் நடிகை மஞ்சுவும் ஒருவர்.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுவுக்குச் சிறுவயதில் இருந்தே கலை ஆர்வம் அதிகம். அதுவே அவரை மேடை நாடகக் கலைஞராக வார்த்தெடுத்தது. புராண கதாபாத்திரங்களைத் தத்ரூபமாக நடிக்கும் மஞ்சுவுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. பெரும்பாலும் நாடக நிகழ்ச்சிகள் முடிய நள்ளிரவு நேரம் ஆகிவிடும் அதன் பிறகு பேருந்து வசதி இருக்காது. இதனால் நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பச் சிரமப்பட்ட மஞ்சு, தனது சொந்தத் தேவைக்காக ஆட்டோ ஒன்றை வாங்கினார்.

மேடை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் வாகனம் காயங்குளம் பகுதியில் இருந்து கலைஞர்களை அழைத்துச் செல்லும். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் வந்து கலைஞர்களை இறக்கி விட்டுச் செல்வதும் வழக்கம். தனது சொந்த ஊரிலிருந்து தனக்குச் சொந்தமான ஆட்டோவில் காயங்குளம் செல்லும் மஞ்சு, மீண்டும் அதே ஆட்டோவில் வீடு திரும்புவார்.

இப்போது மேடை நாடக வாய்ப்பை முற்றிலுமாக இழந்திருக்கும் மஞ்சு, வருமானத்துக்காக முழு நேர ஆட்டோ ஓட்டுநராகிவிட்டார். இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய மஞ்சு, “கேரள மக்கள் கலைக்கழகம் என்னும் அமைப்பில் நானும் ஒரு மெம்பர். அந்த அமைப்பில் முன்பணம் வாங்கித்தான் ஆட்டோ எடுத்திருந்தேன். மேடை நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது சம்பளத்தில் ஆட்டோவுக்காக வாங்கிய கடனுக்கும் கொஞ்சம் பிடிச்சுப்பாங்க. கரோனா காலம் எங்களையும் முடக்கிப் போட்டுவிட்டதால் இப்போது முழுநேரமா ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருக்கிறேன்.

இது எனக்குக் கரோனா கற்றுக் கொடுத்த புதுத்தொழில். தினமும் ஏழெட்டு சவாரிகள் கிடைக்கும். செலவுபோக 300 ரூபாய் கையில் தங்கும். மிகவும் கஷ்டமான இந்த நேரத்துல இந்த வருமானம்தான் கைகொடுக்குது. அரசு கரோனா விழிப்புணர்வு நாடகங்களைப் போடலாம். அதில் எங்களை மாதிரிக் கலைஞர்களை பயன்படுத்திக் கொண்டால் எங்க பொழப்பும் ஓடும்” என்றார் மஞ்சு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in