Published : 10 Jul 2020 02:12 PM
Last Updated : 10 Jul 2020 02:12 PM

15 நாட்களில் ஏன் திடீர் நிலைப்பாடு மாற்றம்? அத்தியாவசியப் பட்டியலிலிருந்து முகக்கவசத்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கேள்வி


கரோனா வரைஸலிருந்து காக்கும் முகக்கவசம், கை சுத்தகரிக்கும் சானிடைசர் போன்றவை அத்தியாவசியப் பட்டியலில் டிசம்பர் மாதம்வரை இருக்கும் என ஜூன் 16-ம் தேதி தெரிவித்த மத்திய அரசு ஏன் அடுத்த 15 நாட்களில் மாற்றிக்கொண்டது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, அதாவது இந்தியாவில் கரோனாவால் 81 பேர் பாதிக்கப்பட்டிருந்தபோது, முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டு வந்து கடந்த மார்ச் 13-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த வகைப் பொருட்களைப் பதுக்குவதோ, விலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி அறிவிப்பதோ சட்டப்படி குற்றமாக்கியது, அவ்வாறு பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்திருந்தது.

ஜூன் 30-ம் தேதி வரை இந்தப் பொருட்கள் அனைத்தும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அறிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி மத்திய அரசு பதிவிட்ட ட்விட்டரின் பதிவையும் குறிப்பிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்

அவர் பதிவிட்ட கருத்தில் “ இந்த ஆண்டு இறுதிவரை சானிடைசர், முகக்கவசம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருக்கும் என ஜூன் 16-ம் தேதி அறிவித்திருந்து.

ஆனால், ஜூலை 1-ம் தேதி அந்த இரு பொருட்களையும் பட்டியலில் இருந்து நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடைப்பட்ட 15 நாட்களில் என்ன மாற்றம் நடந்தது

துன்பத்திலும் வாய்ப்பைத் தேடுகிறாரா பிரதமர் மோடி. பாஜக அரசு பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுடன் கொண்ட உறவால், நிறுவனங்கள் லாபமீட்ட மக்கள் விலை கொடுப்பது வெளிப்பட்டுவிட்டது.

அதனால்தான், முகக்கவசம், சானிடைசர் போன்றவை அத்தியாவசிப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்போது, முகக்கவசம், சானிடைசர் போன்றவை எந்த அதிகபட்ச சில்லரை விலைக்கும் விற்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்

அதுமட்டுமல்லாமல் சுர்ஜேவாலா கடந்த ஜூன் 16-ம் தேதி மத்தியநுகர்வோர் அமைச்சகம் அறிவிக்கையையும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் “ ஜூன் 16-ம் தேதி, பாஜக அரசு என்ன கூறியது என்றால், லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது, சானிடைசர் இனிவரும் நாட்களில் தேவை அதிகரிக்கும். இருப்பினும் டிசம்பர் 31 2020 வரை சானிடைசர் அத்தியாவசியப் பொருட்களில் இருக்கும். மக்களுக்கு எளிதாகக் கிடைக்கவும், குறைந்த விலையில் கிடைக்கவும் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும் ” எனத் தெரிவித்திருந்தது

மற்றொரு ட்விட்டரில் சுர்ஜேவாலா பதிவிட்ட கருத்தில் “ (முதல் கேள்வி) 2020, டிசம்பர் 31 வரை அத்தியாவசியப் பொருட்களில் சானிடைசர் இருக்கும் என ஜூன் 16-ம் தேதி அன்று தெரிவிக்கப்பட்டது, 15 நாட்களில் என்ன மாற்றம் நிகழ்ந்தது? 2-வது கேள்வி, மக்கள் அதிகமான விலை கொடுக்க வேண்டும் என அரசு ஏன் விரும்புகிறது, 3-வது கேள்வி, கரோனாவுக்கு எதிரான போரில் அத்தியவசியப் பொருட்களுக்கு விலை கட்டுப்பாடு ஏன் இல்லை. கரோனாவுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x