கான்பூரில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது விகாஸ் துபேயின் திட்டம் –பலியாவதற்கு முன் மபி போலீஸார் திடுக் தகவல்

கான்பூரில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது விகாஸ் துபேயின் திட்டம் –பலியாவதற்கு முன் மபி போலீஸார் திடுக் தகவல்
Updated on
2 min read

தம்மால் சுட்டுக் கொல்லப்பட்ட கான்பூரின் 8 போலீஸாரை எரித்து சாம்பலாக்குவது என்பதே பலியான ரவுடி விகாஸ் துபேயின் திட்டமாக இருந்துள்ளது. இந்த தகவலை அவர் பலியாவதற்கு முன்பாக நேற்று மத்தியபிரதேசக் காவல்துறையிடம் சிக்கிய போது தெரிவித்திருந்தார்.

கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற பின் கடந்த ஜுன் 3 ஆம் தேதி முதல் தலைமறைவானார் உபியின் ரவுடி விகாஸ் துபே. சுமார் 6 நாட்களுக்கு பின் அவர் நேற்று மபியின் உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலபைரவர் கோயிலில் சிக்கினார்.

இவரை கைதுசெய்த ம.பி மாநில போலீஸார் உஜ்ஜைனின் ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியது. இதில், விகாஸ் அவர்களிடம் கான்பூரில் தான் கடைசியாக செய்தவை மீது பல திடுக் தகவல்களை அளித்திருந்தார்.

கான்பூரின் ரவுடியான விகாஸ் துபேவிற்கு அப்பகுதியின் சவுபேபூர் காவல் நிலையப் போலீஸாரிடன் நல்ல நட்பு இருந்துள்ளது. இதில், அப்பகுதியின் டிஎஸ்பியான தேவ்ந்ந்திர மிஸ்ரா தொடர்ந்து அவருக்கு எதிராக இருப்பதாக விகாஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விகாஸ் துபே வாய்ப்பு கிடைக்கும் போது டிஎஸ்பியை கொன்று விட முடிவு செய்திருந்தார். இதற்கான வாய்ப்பாக கடந்த ஜூன் 2 நள்ளிரவு டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஒரு போலீஸ் படை தம்மை கைது செய்ய வருவதாக விகாஸுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அப்போது, டிஎஸ்பியை சுட்டுக்கொன்ற பின் எரித்து சாம்பலாக்கி ஆதாரங்கள் இன்றி செய்வது எனத் திட்டமிட்டிருந்துள்ளார். இதற்காக, விகாஸ் சுமார் 100 லிட்டர் மோட்டார் வாகன ஆயிலை தனது பிக்ரு கிராம வீட்டில் வாங்கி வைத்தார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி தனது சகாக்களை துப்பாக்கிகளுடன் வரும்படி பிக்ருவின் வீட்டில் அழைத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலீஸார் மீது திடீர் எனத் தனது கும்பலுடன் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார் விகாஸ்.

இந்த சம்பவத்தில் டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர்கள் மற்றும் 4 காவலர்கள் என 8 பேர் பலியாகினர். இவர்களை தொடர்ந்து உபியின் அதிரடிப் படையினரும் பிக்ருவிற்கு வந்து விட்டதால் தனது திட்டம் நிறைவேறவில்லை என மபி போலீஸாரிடம் கூறி இருந்தா விகாஸ் துபே.

அப்போது அவர், ‘நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதால் தான் எனக்கு இந்த நிலைமை. இதை நான் செய்திருக்கக் கூடாது.’ எனக் கூறி வாய்விட்டும் அழுதுள்ளார் விகாஸ்

அந்த துப்பாக்கி சூட்டிற்கு பின் அனைவரும் தனித்தனியாக கிளம்பித் தப்பி விட வேண்டும் எனவும் விகாஸ் தனது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன்பாக சுமார் 30 பேருக்கு பிக்ருவில் தயாரான உணவு விருந்தை எவராலும் உட்கொள்ள முடியாமல் போனதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த செயலுக்கு ஆதரவாக முன்கூட்டியே அவருக்கு உளவு கூறிய சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே.சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை போல் மேலும் பலருடன் விகாஸின் நட்பு வெளியாவதற்குள் அவர் இன்று காலை போலீஸாரிடம் இருந்த தப்பிய போது சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in