Last Updated : 10 Jul, 2020 10:00 AM

 

Published : 10 Jul 2020 10:00 AM
Last Updated : 10 Jul 2020 10:00 AM

‘வந்தே பாரத் மிஷன்’ மூலம் 5.80 லட்சத்துக்கும் அதிகமான  இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு தகவல்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் மூலம் இதுவரை 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் லாக்டவுனால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை விமானம் மூலம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது. இதுவரை 3 கட்டத் திட்டங்கள் முடிந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது தவிர கடல்மார்க்கமாக சமுத்திர சேது திட்டமும் செயல்படுத்தப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் 3 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்துள்ள நிலையில் இதுவரை 5.80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

அனுராக் ஸ்ரீவஸ்தவா : கோப்புப்படம்

கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தேபாரத் மிஷன் செயல்படுத்தியது. ஏர் இந்தியா விமானங்கள், தனியார் விமானங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள்.

இதுவரை 3 கட்டங்களாக வந்தே பாரத் மிஷன் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட வந்தே பாரத் மிஷன் மே 7 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது கட்டம் மே 17 முதல் 22-ம் தேதி வரையிலும் இருந்து பின்னர் ஜூன் 10-வரை நீட்டித்தது. 3-வது கட்டம் ஜூன் 11-ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதிவரை செயல்படுத்தப்பட்டது. 4-வது கட்ட வந்தே பாரத் மிஷன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இதுவரை வந்தே பாரத் மிஷன் மூலம் 5.80 லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். நேபாளம், பூடான், வங்கதேசம், ஆகிய நில எல்லைகள் வழியாக 97 ஆயிரம் இந்தியர்கள் வந்துள்ளனர்.

ஜூலை 8-ம் தேதிவரை வரை இந்தியாவுக்கு வர 6 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேர் தூதரகங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் 5.80 லட்சம் பேர் தாயகம் வந்துள்ளனர்.

வந்தேபாரத் மிஷன் மூலம், கட்டாய காரணங்களுடன் இந்தியாவுக்கு வர வேண்டிய உள்ளவர்கள் மட்டுமே அழைத்துவரப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றனர்.

வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அதிக அளவு இந்தியர்களை அழைத்து வர கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்னும் வந்தே பாரத் மிஷன் தொடரும். 637 சர்வதே விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, இந்தியாவில் 29 விமானநிலையங்களுக்கு இவை இயக்கப்படுகின்றன.

இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x