

கர்நாடகாவில் கரோனா பாதிப்புநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று மாலை வரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் வசிக்கும் மண்டியா மக்களவைத் தொகுதி எம்.பி.யும், நடிகையுமான சுமலதா அம்பரீஷுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினரும், உதவியாளரின் குடும்பத்தினரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
குனிகல் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கநாத் மற்றும் அவரது உதவியாளருக்கு நேற்றுமுன்தினம் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அவரோடு தொடர்பில் இருந்த சிவாஜிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத்14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மஜத எம்எல்சி போஜே கவுடாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல கல்புர்கி தொகுதி பாஜக எம்எல்ஏராஜ்குமார் தெல்கர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் பெங்களூருவில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.