Published : 10 Jul 2020 06:49 AM
Last Updated : 10 Jul 2020 06:49 AM

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான ‘ரெம்டெசிவர்’: 100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக விலை நிர்ணயம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக கருதப்படும் ‘ரெம்டெசிவர்’ ஊசி மருந்தை முதன்முதலாக ‘சிப்லா’ நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. நூறு மில்லி கிராம் அடங்கிய ஒரு மருந்து பாட்டி லின் விலை ரூ.4 ஆயிரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற் றால் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத் தப்படும் மருந்து, மாத்திரைகளே நோயாளி களுக்கு வழங்கப்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கரோனா காய்ச்சலை மருத்துவர்கள் குணப்படுத்தி வருகின்றனர்.

ஆய்வில் கண்டறியப்பட்டது

இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ‘கிளியட் சயின்சஸ்’ நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட ‘ரெம்டெசிவர்’ ஊசி மருந்து, கரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவது ஆய் வில் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த மருந்தை கரோனா வைரஸ் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்தது.

இதேபோல, இந்தியாவிலும் அவசர சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளி களுக்கு மட்டும் ‘ரெம்டெசிவர்’ மருந்தை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, கிளியட் சயின்சஸ் நிறுவனத் திடம் உரிய அனுமதி பெற்று, இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்யத் தொடங்கின. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிப்லா, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹெட்டேரோ, மைலான் என்.வி., ஜுப்லியன்ஸ் லைப் சயின்சஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்து ஜூன் மாத இறுதியில் சந்தைக்கு வரும் என கூறப்பட்டது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘சிப்லா’ நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக ‘ரெம்டெசிவர்’ ஊசி மருந்தை ‘சிப்ரெமி’ என்ற பெயரில் நேற்று சந்தைப்படுத்தியது. 100 மில்லி கிராம் அடங்கிய இந்த ‘ரெம்டெசிவர்’ மருந்தின் விலை ரூ.4 ஆயிரமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும்விட ‘ரெம் டெசிவர்’ மருந்துக்கு மிகக் குறைந்த விலையை நிர்ணயித்துள்ளதாக சிப்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிகில் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும், இம்மாத இறுதிக்குள் 80 ஆயிரம் மருந்து வயால்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீவிர சிகிச்சைக்கு மட்டும்..

இதேபோல, ‘மைலான் என்.வி’, ‘ஜுப்லி யன்ஸ் லைப் சயின்சஸ்’ உள்ளிட்ட நிறுவனங் களும் ரெம்டெசிவர் மருந்தினை விரைவில் சந்தைப்படுத்த தயாராகி வருகின்றன.

ரெம்டெசிவர் ஊசி மருந்தை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளி களுக்கும் வழங்க முடியாது. மாறாக, இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி, தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே இதை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x