Published : 25 Sep 2015 10:12 AM
Last Updated : 25 Sep 2015 10:12 AM

ராமர் பாலத்துக்கு சேதமின்றி மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

ராமர் பாலத்துக்கு சேதமின்றி மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ராமர் பாலத்தை பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆராய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 6 மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளது.

அதன் அடிப்படையில் ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்து அறிவிப்பார்.

நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1500 கோடி லாபம் ஈட்டப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ரூ.2500 கோடி லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய அவற்றின் அருகே மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். இதன்படி 200 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் சூரிய சக்தி, காற்றாலையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

சென்னையில் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்றினால்தான் சென்னை துறைமுகத்தில் விரிவாக்கப் பணிகளை மேற் கொள்ள முடியும். எனவே பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளச்சல் துறைமுகம் சர்வதேச கடல் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஆந்திரா, தமிழகம், புதுச் சேரியை இணைந்த பக்கிங்காம் கால்வாயை மீண்டும் முக்கிய நீர்வழித்தடமாக மாற்றுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x