

பல சவால்களைக் கடந்த வரலாற்றை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மீள்வதற்கான வளர்ச்சி அறிகுறிகள் தென்படுகின்றன. உலகப் பொருளதாார மீட்சிக்கு இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லியில் இந்தியா குளோபல் வீக்-2020 எனும் மூன்று நாள் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் வளர்ச்சி, மீட்சியைப் பற்றி பேசுவதுதான் இயல்பாகும். உலகளாவிய மீட்சியுடன், இந்தியாவையும் தொடர்புபடுத்திப் பேசுவது இயல்பானதுதான். உலக அளவில் பொருளாதார மீட்சி ஏற்படும்போது அதில் இந்தியாவின் பங்கு முக்கியமாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களையும், தொழில்நுட்பப் பணியாளர்களையும் யாரால் மறக்க முடியும். பல பத்தாண்டுகளாக பலருக்கும் அவர்கள் வழிகாட்டி வருகிறார்கள். இந்தியா என்பது அறிவுத்திறன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சக்தி மையம். உலகத்துக்கே அதன் பங்களிப்பை அளித்து வருகிறது.
இந்தியர்கள் இயல்பாகவே சீரமைப்பாளர்கள். வரலாற்று ரீதியாகவே பல்வேறு சவால்களை இந்தியா வெற்றிகரமாகக் கடந்து வென்ற பெருமை இருக்கிறது. ஒருபுறம் கரோனா வைரஸை எதிர்த்து இந்திய அரசு போராடி வருகிறது. மறுபுறம் மக்களுக்கான சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளை அளித்துக்கொண்டு, பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் முயன்று வருகிறது
கரோனா வைரஸால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்த மிகவும் கவனத்துடனே இந்தியா மீண்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான வளர்ச்சி அறிகுறிகள் ஏற்கெனவே தென்படத் தொடங்கிவிட்டன.
இதில் பெரிய வியப்பு ஏதும் இல்லை. ஏனென்றால், சாத்தியமில்லாத நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டுவதுதான் இந்தியர்களுக்கு இருக்கும் சக்தியாகும்.
உலக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். சில நாடுகளே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துகின்றன. இந்திய மருத்துவத்துறை மிகப்பெரிய சொத்தாக தேசத்துக்கு விளங்குகிறது. நாட்டுக்கே மட்டுல்லாமல் உலகிற்கே இந்தக் கரோனா காலத்தில் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. மருந்துகளின் விலையைக் குறைத்து, வளர்ந்து வரும் நாடுகளுக்கு அளித்ததில் முன்னணியாக இந்திய மருந்து நிறுவனங்கள் விளங்கின''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.