Last Updated : 09 Jul, 2020 01:56 PM

 

Published : 09 Jul 2020 01:56 PM
Last Updated : 09 Jul 2020 01:56 PM

சூரத்திலிருந்து நாள்தோறும் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறுகிறார்கள்: கரோனாவால் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலையிழப்பு

கோப்புப்படம்

சூரத்

கரோனா வைரஸ் பாதிப்பால், குஜராத் மாநிலத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள பெரும்பலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், வருமானத்துக்கு வழியில்லாமல் நாள்தோறும் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய கணக்கின்படி குஜராத்தில் கரோனா வைரஸுக்கு 1,993 பேர் உயிரிழந்துள்ளனர். 38 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் மார்ச் மாதம் பரவத் தொடங்கியதிலிருந்து அந்த மாநிலத்தில் முக்கியத் தொழிலாக இருக்கும் வைரம் பட்டை தீட்டும் தொழில் மூடப்பட்டது.

ஏறக்குறைய 100 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியில்லாமல் தற்போது கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்

இதுகுறித்து சூரத்தில் உள்ள வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் ஜெய்சுக் கஜேரியா பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “சூரத்தில் மட்டும் 9 ஆயிரம் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

6 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகிறார்கள். ஆனால், கரோனா வைரஸ் மார்ச் மாதம் பரவத் தொடங்கியதிலிருந்து தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. தற்போதுவரை பெரும்பாலானவை திறக்கப்படவில்லை.

ஜூன் மாதம் சில தொழிற்சாலைகள் மட்டும் திறக்கப்பட்டு வைரம் பட்டை தீட்டும் தொழில் தொடங்கியது. ஆனால், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதால் மீண்டும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஜூலை 13-ம் தேதி வரை தொழிற்சாலைகளை மூட சூரத் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

இதனால் வருமானம் இல்லாமல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சூரத்திலிருந்து வெளியேறி வருகின்றனர். ஏறக்குறைய 70 சதவீதம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இவர்கள் திரும்பி வருவார்களா என்று உறுதியாகக் கூற இயலாது.

பெரும்பாலான தொழிலாளர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேலையிழப்பு ஏற்பட்டதால் வருமானத்துக்கு வழியில்லை, வாடகையும் செலுத்த முடியவில்லை. 4 மாதங்களாக வேலையில்லாமல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சூழல் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் சிறிதளவே நம்பிக்கை இருப்பதால், நாள்தோறும் 1500 குடும்பங்கள் வரை வெளியேறுகின்றன.

ஏறக்குறைய 70 சதவீதம் ஊழியர்கள் வெளியேறிவிட்டார்கள் என்பது இதுவரை எப்போதும் இல்லாத ஒன்றாகும். தொழிலாளர்கள் இனிவரும் காலத்தில் வர நினைத்தாலும் குடும்பத்தினர் வரமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

சூரத் சொகுசுப் பேருந்து உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் தினேஷ் அந்தான் கூறுகையில், “நாள்தோறும் 300 சொகுசுப் பேருந்துகள், ஏறக்குறைய 6 ஆயிரம் பயணிகள் சூரத்திலிருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வைரத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள். தொழிற்சாலை மூடப்பட்டதால், வேலையிழந்து சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் வேலைக்காகச் செல்கிறார்கள்.

இதுதவிர நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வரை கார்களிலும், லாரிகளிலும், வேறு வாகனங்களிலும் செல்கின்றனர். இதுபோன்று மக்கள் கூட்டத்தை நாங்கள் தீபாவளி நேரத்தில்தான் பார்க்க முடியும்.
தொழிலாளர்களின் உடைமைகளுக்கு நாங்கள் கட்டணம் விதிக்கவில்லை. அவற்றைப் பேருந்தின் மேல்பகுதியில் வைத்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

சூரத் மாநகராட்சி ஆணையர் பன்ச்சாநிதி பானி கூறுகையில், “சூரத்திலிருந்து நாள்தோறும் ஏராளமானோர் வெளியேறுகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை எங்களிடம் இல்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x