

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்க அந்நிறுவனத்தின் பங்குகளை கைமாறாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
சிவசங்கரன் தலைமையிலான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, அனந்த கிருஷ்ணன் தலைமையில் இருந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு வாங்கி, அந்நிறுவனம் சன் டிடிஎச் மற்றும் எஃப்.எம் ரேடியோவில் முதலீடு செய்ததில், ரூ.650 கோடி லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு வியாழக் கிழமை விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமி ஆஜராகி, இன்னும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யா மல் தாமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “இந்த ஊழல் குறித்த அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். உச்சநீதிமன்றமும் பலமுறை கண்டனம் தெரிவித்து விட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ஆறு மாதங்களுக்கு முன்பே சிபிஐ தெரிவித்தது.
இருந்தாலும், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யாமல் இழுத்தடிக்கிறது,” என்று வாதிட்டார். சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால், “இந்த வழக்கில் குற்றத் தன்மை குறித்த ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
இதில், ஒத்துழைப்பு தர வேண்டிய மலேசிய அரசிடம் இருந்து முழு விவரங்கள் கிடைக்கவில்லை,” என்றார்.
இந்த வழக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் இதுவரை நடத்திய விசாரணை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டனர்.