Last Updated : 09 Jul, 2020 12:35 PM

 

Published : 09 Jul 2020 12:35 PM
Last Updated : 09 Jul 2020 12:35 PM

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட உ.பி. ரவுடியான விகாஸ் துபே சரணா? கைதா?

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட உபியின் முக்கிய ரவுடி விகாஸ் துபே மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபப்பை கிளம்ப்பியுள்ளது. இவர் உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலில் சரணடைய வந்தாரா? அல்லது கைது செய்யப்பட்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த ஜூன் 2 நள்ளிரவில் கான்பூரின் பிக்ரு கிராமத்தில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியதில் இருந்து துபே தலைமறைவாக உள்ளார். கான்பூர் போலீஸாருடன் உபியின் அதிரடிப் படையினரும் அறுபதிற்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து விகாஸை தீவிரமாகத் தேடி வந்தனர்.

உபி போலீஸாருடன் இணைந்து டெல்லி, ஹரியானா, மபி, ராஜஸ்தான் ஆகிய மாநில போலீஸாராலும் விகாஸ் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இதனால், உபி போலீஸாரிடம் சிக்கினால் தான் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சம் விகாஸுக்கு தொடர்ந்து இருந்துள்ளது.

இதன் காரணமாக டெல்லி அல்லது ஹரியானாவின் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரணடைய விகாஸ் முயன்றார். இதற்காக, கான்பூரில் தப்பிய விகாஸ் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானாவின் எல்லையில் உள்ள பரீதாபாத் அடைந்தான்.

அங்கு ஒரு சாதாரண விடுதியில் தங்கிய போது நேற்று முன்தினம் சிசிடிவி கேமிராவில் சிக்கியதால் அங்கிருந்தும் தப்பினான். வேறு வழியின்றி ம.பி மாநிலப் போலீஸாரிடம் சரணடைந்தால் தம் உயிர் தப்பும் என விகாஸ் கருதியுள்ளான்.

இதனால், உஜ்ஜைனில் சரணடைய வந்தவர் அங்குள்ள மகாகாலபைரவன் கோயிலுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு உஜ்ஜைன் நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டவர் கடைசி நேரத்தில் கோயில் காவலர்களிடமே சரணடைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இங்குள்ள மஹாகாலபைரவர் கோயிலின் காவலர்களால் வளக்கப்பட்ட விகாஸ் துபே மீதானத் தகவல் உஜ்ஜைன்போலீஸாருக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ்சிங் தலைமையில் அங்கு போலீஸ் படை வந்தது.

அவர்கள் நடத்திய விசாரணையில் கிரிமினல் விகாஸ், ‘நான் கான்பூர்காரன் விகாஸ் துபே தான்’ என ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், விகாஸ் துபேயை உஜ்ஜைன் போலீஸார் கைது செய்ததாக ம.பி மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், சர்ச்சையாகி விட்ட விகாஸ் துபே சிக்கியது எப்படி என்பது குறித்து தெளிவானத் தகவல்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதில் உண்மையான தகவல்கள் வெளியாவது கடினமே எனக் கருதப்படுகிறது.

இதனிடையே, வட மாநிலங்களில் புகழ்பெற்ற கோயிலான மஹாகாலபைரவர் பகுதி விகாஸின் கைதால் பரபரப்பிற்கு உள்ளாகி விட்டது. இங்கு விடியல் முதலாகவே விகாஸ் கோயில் முன்பாக சுற்றி வந்து கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் படக்காட்சிகள் கோயிலின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. பிறகு கோயில் காவலர்களிடம் சிக்கிய விகாஸ் துபேயை 4 சாதாரணக் காவலர்கள் மடக்கி பிடித்தபடி கோயில் வளாகத்திற்கு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, விகாஸின் தலைமறைவிற்கு அவரது உறவினரான ராஜ் குல்லர் என்றழைக்கப்படும் கியானேந்தர பிரகாஷ் மபியின் ஷஹதோலில் கைது செய்யப்பட்டார். இங்கு விகாஸை தேடி உபி போலீஸார் வந்த போது குல்லர் கடந்த வாரம் சிக்கி இருந்தார்.

குல்லர் மீது மபி மற்றும் உபியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்பட்டு வந்த குற்றவாளியான குல்லரின் ஆட்கள் உதவியும் மபியின் உஜ்ஜைன் வந்த விகாஸுக்கு கிடைத்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

அகிலேஷ் யாதவ் எழுப்பும் சர்ச்சை

இது குறித்து உபியின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ், ‘கான்பூர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி விகாஸ் துபே போலீஸார் வசம் இருப்பதாக அறிந்தோம்.

இது உண்மை எனில் அவர் கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு முன்பாக விகாஸ் தொடர்புகொண்டு பேசியவர்கள் விவரமும் பொதுமக்கள் முன் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.’ என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே பிரச்சனையில் உபியின் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாவ் தாக்கூர் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘உபி போலீஸாரால்

விகாஸை கைது செய்ய முடியவில்லை. எனவே, அவர் மபியின் உஜ்ஜைனில் சரணடைந்துள்ளார். இதனிடையில் நடந்த சம்பவம் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x