குல்புஷண் ஜாதவுக்கு மரண தண்டனை மேல்முறையீடு உரிமை மறுக்கப்பட்டுள்ளது; பாக். பேச்சு கேலிக்கூத்து: இந்தியா பதிலடி

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷண் ஜாதவ்: கோப்புப்படம்
பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷண் ஜாதவ்: கோப்புப்படம்
Updated on
2 min read

உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷண் ஜாதவ், தன்னுடைய மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விருப்பமில்லை என்று கட்டாயப்படுத்தி சொல்ல வைக்கப்பட்டுள்ளார், அவருக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பேச்சு கேலிக்கூத்து என்று மத்திய அரசு விமர்சித்துள்ளது

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷண் ஜாதவை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017 ஏப்ரலில் குல்புஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது.

குல்புஷண் ஜாதவுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டை பாகிஸ்தான் கூறுகிறது, அவருக்கு தூதரக உதவிகளை அளிக்கக் கூட மறுக்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்புஷண் ஜாதவுக்கு வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அவருக்குத் தூதரக உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது

இந்த சூழலில் பாகிஸ்தான் அரசின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் அகமது இர்ஃபான்கான் நேற்று அளித்த பேட்டியில் “ குல்புஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். கடந்த மாதம் 17-ம் தேதி அவரை மேல்முறையீடு செய்ய அனுமதித்தோம் ஆனால் தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார். அவருக்கு இருமுறை தூதரக உதவிகளும் வழங்கப்பட்டன.இருப்பினும், ஜாதவ் தாக்கல் செய்த கருணை மனு நிலுவகையில் இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்

வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக்ஸ்ரீவஸ்தவா: கோப்புப்படம்
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக்ஸ்ரீவஸ்தவா: கோப்புப்படம்

பாகிஸ்தான் கூற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தயக்கம் காட்டி, பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறது. இந்த வழக்கில் தீர்வுக்கான மாயையை உருவாக்க பாகிஸ்தான் முயல்கிறது. ஆனால், இந்தியர் குல்புஷண் ஜாதவை பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர அனைத்துவிதமான பணிகளையும் இந்தியா செய்யும்.

பாகிஸ்தான் அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜாதவ், தன்னுடைய தண்டனையை குறைக்கும் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய மறுத்துவிட்டார் என்ற பாகிஸ்தானின் கூற்று, கடந்த 4 ஆண்டுகளாக நடந்த கேலிக்கூத்தின் தொடர்ச்சியாகும்.

சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்று கானல்நீர் தோற்றத்தை உருவாக்க பாகிஸ்தான் முயல்கிறது. இதுவரை ஜாதவ் மீதான முதல் தகவல் அறிக்கை, ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு எதையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் அளிக்கவில்லை.

கேலிக்கூத்தான விசாரணை நடத்தப்பட்டு, ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில்தான் ஜாதவ் இருக்கிறார். ஜாதவுக்கு மேல்முறையீடு செய்யும் உரிமை வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி, தனது உரிமைகளைக் கோரக்கூட ஜாதவுக்கு பாகிஸ்தான் மறுக்கிறது. சர்வதேச சட்டங்களை பாகிஸ்தான் ஏராளமாக மீறுகிறது என்று ஏற்கெனவே சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசு ஜாதவை பாதுகாக்க உச்சபட்ச முயற்சிகளை எடுக்கும், அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிக்கும்.

இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in