

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர். வெங்கடாபுரம் பகுதியில் கடந்த மே 7-ம் தேதி எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிந்தது. இதில் அந்த பகுதியைச்சேர்ந்த 15 பேர் மூச்சுத் திணறிஉயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் தோல் வியாதி, நுரையீரல் பிரச்சினைகளுக்கு ஆளாகினர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் 3 அரசுஅதிகாரிகளின் அலட்சிய போக்கும்ஒரு காரணம் என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த 3 அதிகாரிகளை ஆந்திர அரசு பணியிடை நீக்கம் செய்தது. இதைத் தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயமும் ஒரு குழுவை டெல்லியிலிருந்து அனுப்பி விசாரணை நடத்தியது. இக்குழு எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் மனித தவறுகளே இந்த சம்பவத்திற்கு காரணம் என தீர்ப்பாயத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், ஆந்திர அரசு இந்த சம்பவம் குறித்து முழு விசாரனை நடத்த நீரப்குமார் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு நேரில் சென்று விசாரனை நடத்தி 350 பக்க அறிக்கையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சமர்ப்பித்தது. விஷவாயு கசிவுக்கு எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனமே முழு காரணம் என்றும் அங்குள்ள 36 சைரன்களும் செயல்படவில்லை என்றும், எம்-6 டேங்கில்குறைபாடு இருந்த காரணத்தினாலேயே விஷவாயு கசிந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் நகர காவல் ஆணையர் மீனா தலைமையிலான போலீஸார்எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் (சிஇஓ) நிர்வாக இயக்குநருமான சங்-கீ-ஜாங், தொழில்நுட்ப இயக்குநர் டி.எஸ். கிம் கொரியன், கூடுதல் இயக்குநர் பூர்ண சந்திரராவ் உட்பட 12 பேரை கைது செய்தனர்.