

கடந்த 2016-ம் ஆண்டு ஈரானிலிருந்து பலுசிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவை கைது செய்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் கடற்படையிலிருந்து ஓய்வுபெற்றதும் ஈரான் சென்று தொழில் நடத்தி வந்த குல்பூஷணை பாகிஸ்தான் கடத்தி வந்ததாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், உளவு, தீவிரவாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி 2017 ஏப்ரலில் குல்பூஷணுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான இந்தியா தொடுத்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், மரண தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இதன்படி, குல்பூஷண் ஜாதவை கடந்த மாதம் 17-ம் தேதி அழைத்த பாகிஸ்தான் அதிகாரிகள், மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி மனு செய்யும்படி கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்குள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி குல்பூஷண் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என கூடுதல் அட்டார்னி ஜெனரல் வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும் 2017-ல் தான் தாக்கல் செய்த கருணை மனு மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு குல்பூஷண் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.