

கான்பூரில் சுட்டுக்கொல்லபட்ட 8 போலீஸாரில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ராவும் ஒருவர். மருத்துவராக விரும்பிய அவரது மகள் தந்தையின் மறைவால் காவல்துறையில் சேர உள்ளார்.
உ.பி.யின் முக்கியக் கிரிமினல் விகாஸ் துபேயை பிடிக்க கடந்த 2 ஆம் தேதி இரவு கான்பூரின் பிக்ரு கிராமம் சென்றது உ.பி. போலீஸ் படை. இதற்கு தலைமை தாங்கிச் சென்ற அப்பகுதியின் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, காவல்துறை 2 துணை ஆய்வாளர்கள் மற்றும் ஐந்து காவலர்களுடன் விகாஸால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீரமரணம் அடைந்த டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ராவிற்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான வைஷ்ணவி மருத்துவராக வேண்டி நீட் நுழைவுத் தேர்விற்கு தயாராகி வந்தார்.
மருத்துவராகப் பணியாற்றி ஏழைகளுக்கு சேவை செய்வது வைஷ்ணவியின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், அவரது தந்தைக்கு கிடைத்த வீரமரணம் காரணமாக மகள் வைஷ்ணவியின் குறிக்கோள் திசை மாறி விட்டது.
பணியின் போது டிஎஸ்பி தேவேந்தர் மிஸ்ரா இறந்தமையால் அவரது குழந்தைகளுக்கு உ.பி. காவல்துறையில் ஒரு பணி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை அவரது மூத்த மகள் வைஷ்ணவி ஏற்க முடிவு செய்துள்ளார்.
இனி உ.பி. காவல்துறையில் இணைந்து தனது தந்தை மீதம் வைத்த சாதனைகளை செய்ய வைஷ்ணவி முன்வந்துள்ளார். இவரது இளைய சகோதரி வைஷ்ராடி கான்பூரின் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார்.