Last Updated : 08 Jul, 2020 07:12 PM

 

Published : 08 Jul 2020 07:12 PM
Last Updated : 08 Jul 2020 07:12 PM

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு எந்த அச்சமும் இல்லை; இதே கேள்விகளை அரசுக்கு நெருக்கமான ‘3 அமைப்புகளிடம்’ கேட்பீர்களா?- காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி : கோப்புப்படம்

புதுடெல்லி

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு அமலாக்கப்பிரிவு விசாரணையைச் சந்திப்பதில் எந்த அச்சமும் இல்லை. ஆனால், மத்திய அரசு எதிர்க்கட்சி மீது கண்மூடித்தனமான அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறி, ஆட்களுக்கு ஏற்றார்போல் தனது கொள்கையை நியாயமற்ற வகையில் மாற்றிக் கொள்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையிடம் விசாரணையில் கேட்கப்படும் அதே கேள்விகளை அரசுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த ‘3 அமைப்புகளிடம்’ கேட்பீர்களா என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைவராக இருக்கும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி சாரிடபிள் டிரஸ்ட், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம், வருமானவரிச் சட்டம், அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றை மீறிச் செயல்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு அமலாக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி அளித்துள்ளார்.


இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள், பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவைப் பார்த்து அச்சப்படவில்லை. சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதால், ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் பதில் அளிப்போம்.

மத்திய அரசு என்ன விதமான இயந்திரங்களையும், தந்திரங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு விசாரணையிலும் எந்தக் கேள்விகளைக் கேட்க விரும்புகிறதோ அந்தக் கேள்விகளைக் கேட்கலாம்.

ஆனால், ஒன்றை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி அறக்கட்டளையிடம் கேட்கப்படும் அதே கேள்விகள் மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த 3 அமைப்புகளிடமும் கேட்கப்படுமா?

ஒவ்வொரு எதிர்க்கட்சியையும், எதிர்க்கட்சியில் இருக்கும் தனிநபர்களையும், எதிர்க்கட்சியில் இருக்கும் அமைப்புகளையும் மத்திய அரசு துன்புறுத்துகிறது.

இதில் அழகான விஷயம் என்னவென்றால் ராஜீவ் காந்தி அறக்கட்டளையிடம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தையும் உங்கள் அரசுடன் நெருக்கமாக இருந்துவரும், புனிதமாக நீங்கள் கரும் விவேகானந்தா அறக்கட்டளை, இந்தியா அறக்கட்டளை அல்லது பாஜகவின் வெளிநாடு நண்பர்கள், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளிடம் கேட்கமாட்டீர்கள்.

இந்த 3 அமைப்புகளுக்கும் 9 பட்டியலில் இருந்து விலக்கு அளித்துள்ளீர்கள். இந்த 3 அமைப்புகளிடம் இருந்து எப்போதும் கேள்விகளைக் கேட்கமாட்டீர்கள்

ராஜீவ் காந்தி அறக்கட்டளை பற்றிக் கேள்விகள் கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு குறித்து தேசத்துக்கு காங்கிரஸ் அம்பலப்படுத்தும். ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் நிதி விவரங்கள் குறித்து தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்களை நாங்கள் லாரிகளில் வழங்குவோம். மத்திய அரசின் நெருக்கடிகளுக்குப் பணிந்துவிடாமல் தொடர்ந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை தனது பணிகளைச் செய்யும்''.

இவ்வாறு சிங்வி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையும் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைக்கு மிரளமாட்டார்கள். பீதியடைந்த மோடி அரசு கண்மூடித்தனமான ஆதாரமில்லா, அபாமாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது.

பாஜகவின் நாகரிகமற்ற மற்றும் நயவஞ்சகமான வெறுப்பு ஒவ்வொரு நாளும் வெட்கப்படக்கூடிய வகையில், அசிங்கமான முறையில் காங்கிரஸால் வெளிப்படுத்தப்படுகிறது.

மோடி அரசின் வெளிப்படையான திறமையின்மை மற்றும் முழுமையான தோல்வியைப் புதைக்கத் தவறான தகவல்களைப் பரப்பியும், மக்களுக்குக் கவனச்சிதறலை ஏற்படுத்தியும், திசை திருப்பலிலும் பாஜக ஈடுபடுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு புதிய சதியை பாஜக தலைமை வடிவமைக்கிறது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையை முற்றிலும் தீய நோக்கில், பழிவாங்கும் நோக்கில் விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்தின் திறமையற்ற தன்மையை அம்பலப்படுத்துபவர்கள் மோசமாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து மோடி-ஷா அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளால் வழங்கப்படும் மனிதநேயப் பணிகள் மற்றும் மதிப்புமிக்க சேவைகள் எப்போதுமே தனித்து நிற்கும். எந்தவொரு பழிவாங்கும் மற்றும் இந்த விவகாரத்துக்கு தொடர்பில்லாத எந்த விசாரணையையும் தாங்கும்.

இந்த நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நம்பிக்கைக்குரியாக இருக்க வைப்ப்பதற்கும், தாழ்த்தப்பட்டோர், விளிம்புநிலை மக்களுக்காக மத்திய அரசைப் பேசவைக்கவும் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது'' என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x