

மும்பை தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பு இரண்டுமே முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக மும்பையில்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர் பெற்ற தாராவியும் மும்பையில்தான் உள்ளது.
கரோனா வைரஸ் பரவலின் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற அளவுக்கு தாராவி சென்றது. ஆனால் வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவியில் வசிக்கும் மக்கள்முழு ஊரடங்கு கடைபிடித்ததும், பரிசோதனைக்கு பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளித்ததும் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகள் மூலம் தாராவியில் இப்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு தாராவி ஒரு ‘மாடல்’ பகுதியாக விளங்குகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்துதாராவியில் 47,500-க்கும் மேற்பட்டகுடிசைகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு போன்ற பரிசோதனைகளை நடத்தி உள்ளனர். ஏறக்குறைய 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தாராவி மக்களுக்கு அதிகாரிகள் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், அவசரசிகிச்சை அளிக்க அந்தப் பகுதியிலேயே ‘கிளினிக்’ அமைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் இருந்தவர்கள், உடனடியாக அருகில் உள்ள பள்ளி மற்றும் விளையாட்டு கிளப்புகளில் உருவாக்கப்பட்டிருந்த தனிமை மையங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் மே மாதம் முதல் வாரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்தது. அத்துடன்சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தாராவியில் புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நிம்மதி அளிக்கும் வகையில் மும்பை தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,335 ஆக உள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் தாராவியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.