ஷீனா போரா கொலை விசாரணையால் கர் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் பரபரப்பு விற்பனை: போக்குவரத்து நெரிசலால் உள்ளூர் மக்கள் அதிருப்தி

ஷீனா போரா கொலை விசாரணையால் கர் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் பரபரப்பு விற்பனை: போக்குவரத்து நெரிசலால் உள்ளூர் மக்கள் அதிருப்தி
Updated on
1 min read

ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் மும்பையின் கர் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் பரபரப்பாக விற் பனை நடந்து வருகிறது. அதே சமயம் போக்குவரத்து நெரி சல், சத்தத்தால் உள்ளூர்மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கை கர் போலீஸ் நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி மற்றும் சஞ்சீவ் கண்ணா, டிரைவர் ஷ்யாம் ராய் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் வழக்கு தொடர்பாக இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, ஷீனாவின் தந்தை சித்தார்த் தாஸ், இவரது மகன் மைக்கேல் ஆகியோரிடம் அடுத்தடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாத இறுதியில் விசாரணை தொடங்கியதில் இருந்து கர் போலீஸ் நிலைய பகுதியில் பல்வேறு ஊடக செய்தியாளகள், புகைப்படக் கலைஞர்கள் அங்கு குவிந்துள்ளனர். பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமானதால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிறது.

போலீஸ் நிலையம் அருகில் ஓட்டல் நடத்தும் பத்மா யத்கிரா கூறும்போது, ‘‘இப்போது ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்து சாப்பிடுகின்றனர். தண்ணீர் குடிக்க கூட எனக்கும் என் மகனுக்கும் நேரமில்லை. அந்தளவுக்கு ஒரு வாரமாக விற்பனை அதிகரித்துள்ளது. ஷீனா போரா கொலை வழக்கை கர் போலீஸ் நிலையம் விசாரிக்க தொடங்கி முதல் 2 நாட்கள் எங்களால் சமாளிக்க முடியவில்லை’’ என்றார். கடந்த ஒரு வாரமாக தினசரி வருவாய் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறுகிறார் பத்மா.

அதேபோல் ‘கணேஷ் எனர்ஜி ஸ்டால்’ வைத்துள்ள தீபக் அகர்வால் கூறும்போது, ‘‘சாதாரண நாட்களில் விற்பனை ஓரளவு இருக்கும். இப்போது விற்பனை அமோகமாக உள்ளது’’ என்றார்.

எனினும், போலீஸ் நிலையம் எதிரில் வசிக்கும், ஊடகத்தில் பணியாற்றிய 31 வயது பிரசுமிதா கூறும்போது, ‘‘ஊடகங்கள் குவிந்துள்ளதால் இந்த பகுதியே கூச்சல் குழப்பமாக காணப்படுகிறது. 24 மணி நேரமும் ஊடகத்தை சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். மைக்கை பிடித்து கொண்டுள்ள நிருபர்கள், கேமராக்களை பார்த்து பொதுமக்கள் பிரமிப்புடன் உள்ளனர்’’ என்றார்.

விகாஸ் உபாத்யாய் என்ற இளைஞர் கூறும்போது, ‘‘கர் பகுதி இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டதில் மகிழ்ச்சிதான். ஆனால், இந்த வழக்கில் ஊடகங்கள் இந்தளவுக்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்த வேண்டும். ஒரே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பெரும் பிரச்சினையாக இருக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in