

தெலங்கானா மாநில தலைநகராக விளங்கும் ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில், சுமார் 25.5 ஏக்கர் பரப்பளவில் அப்போதைய நிஜாம் மன்னரால் நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. தவிர, ஹைதராபாத் தலைமைச் செயலகம் 9 பிளாக்குகள் கொண்ட கட்டிடமாகும்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம்தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தனி தெலங்கானா உருவானது. அப்போது முதல் தற்போதுவரை கே.சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். தலைநகரமாக ஹைதராபாத் விளங்குகிறது. ஆனால், 2024 வரை ஹைதராபாத் தலைநகரையே ஆந்திராவும் பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் தலைமைச் செயலகத்தின் மீது ஆந்திராவுக்கு அதிகாரம் இருந்தாலும், அது தேவையில்லை என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதனால் இந்த இடத்தில் ரூ.400 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட கே. சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அதன்படி புகழ்பெற்ற கட்டிடம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. புதிய தலைமைச் செயலகத்தின் வரைபடத்தை முதல்வர் பார்வையிட்டார்.