ராகுல் காந்தி மருத்துவர் அல்ல; அவருக்கு நிரூபிப்போம்: தரமற்ற வென்ட்டிலேட்டர்கள் குற்றச்சாட்டுக்கு அக்வா நிறுவனம் மறுப்பு
மத்திய அரசு தனியார் நிறுவனத்திடமிருந்து தரமற்ற வென்ட்டிலேட்டர்களை வாங்கி கரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதாக ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை தனியார் நிறுவனமான அக்வா நிறுவன உரிமையாளர் பேராசிரியர் திவாகர் வைஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது பன்னாட்டு வென்ட்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வென்ட்டிலேட்டர்கள் மீது அவதூறு பரப்புவதற்காக தரமற்றவை என்று கூற முற்படுகிறது. அதனால் இந்திய தயாரிப்புக்கு எதிராக சதி செய்கிறது என்றார் திவாகர் வைஷ்.
“நாங்கள் ஒன்றும் ஒரே இரவில் வென்ட்டிலேட்டர்கள் தயாரிப்புக்கு வந்தவர்களல்ல. சந்தையில் 3 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இதை படிப்படியாகவே வளர்த்தெடுத்து வந்தோம். ஒரு இயல்பான வென்ட்டிலேட்டர் எப்படி இருக்க வேண்டுமோ அதன் அளவுகோல்களுடனேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. நார்மல் வென் ட்டிலேட்டர்கள் விலை ரூ.10 முதல் ரூ.20 லட்சம் ஆகும், ஆனால் எங்களுடையது ரூ.1.5 லட்சம் மட்டுமே. இதனை பன்னாட்டு வெண்ட்டில்லேட்டர் விற்பனையாளர்கள் ஏற்பார்களா? அதனால்தான் சதி செய்கின்றனர்.
இதில் பன்னாட்டு விற்பனையாளர் வலைப்பின்னல் வலுவானது. எப்படி இந்திய ராணுவத் தளவாடங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டால் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வருமோ அதே தான் எங்கள் வென் ட்டிலேட்டர்கள் விவகாரத்திலும் நடக்கிறது.
ராகுல் காந்தி ஒன்றும் மருத்துவர் அல்ல, அவர் அறிவார்த்தமானவர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் முன் அவர் நிதானமாக அவதானிக்க வேண்டும். அவர் மருத்துவர்களை கலந்தாலோசித்து விட்டு கருத்து தெரிவித்திருக்கலாம். எந்த ஒரு நோயாளி மூலம் எந்த மருத்துவமனையிலும் எங்கள் வென் ட்டிலேட்டர்கள் தரத்தை நிரூபிக்கத் தயார்.
அதாவது வென் ட்டிலேட்டர்களை வாங்கி அதை நிர்மாணிக்கும் போது எங்களை ஆலோசிக்காமல் நிர்மாணித்தால் தவறாக அது செயல்பட வாய்ப்புள்ளது. முறையாக அதைப் பயன்படுத்த வேண்டும்.
டெல்லி எல்.என்.ஜே.பி மருத்துவமனை எங்கள் வென் ட்டிலேட்டர்களை நிராகரிக்கவில்லை. மும்பையில் ஜேஜே மருத்துவமனை செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனை வேற்று நபர்கள் மூலம் வெண்ட்டிலேட்டர்களை நிர்மாணித்தனர், அவர்கள் முறையாக நிர்மாணிக்கவில்லை. பெட்ரோலுக்குப் பதில் டீசலைப் பயன்படுத்தினால் விளங்குமா?” எங்கள் ஆட்கள் சென்று சரி செய்த பிறகு நன்றாக வேலை செய்கிறது, நானே ஒரு மருத்துவமனையில் ஜூன் 30ம் தேதி அங்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை செய்து காட்டினேன், இப்போது நன்றாக வேலை செய்கிறது. எனவே தரக்குறைவு போன்ற விமர்சனங்களை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்” என்றார் அக்வா உரிமையாளர் பேராசிரியர் திவாகர் வைஷ்.
மத்திய அரசு இந்த நிறுவனத்திடமிருந்து 10,000 வென் ட்டிலேட்டர்களை ஆர்டர் செய்துள்ளது. மேக் இன் இந்தியா, இன்வெஸ்ட் இந்தியாவின் ஆதரவு இந்த நிறுவனத்துக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாதம் ஒன்றுக்கு 50-100 வென் ட்டிலேட்டர்களே தயாரித்துக் கொண்டிருந்த அக்வா நிறுவனம் தற்போது கரோனா நோயினால் ஏற்பட்ட தேவை காரணமாக 5000 வரை உற்பத்தி செய்யுமாறு அதிகப்படுத்தியுள்ளது.
