Published : 07 Jul 2020 05:52 PM
Last Updated : 07 Jul 2020 05:52 PM

கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில் மத்திய அரசின் தோல்வியை திசைத் திருப்ப ராகுல் காந்தி மீது விமர்சனம்: அமரீந்தர்

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதல் விவகாரத்தில் மத்திய அரசின் தோவ்லியைத் திசைத்திருப்ப பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தாக்குதல் தொடுக்கிறார் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் வற்புறுத்தலான, மீண்டும் மீண்டும் கேட்கப்படும் சம்பந்தமுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார் நட்டா என்று அமரீந்தர் சாடியுள்ளார்.

“ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடுமே அவர் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறது. நம் வீரர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்புடைய அந்தக் கேள்விகளுக்கு பதில் வேண்டியுள்ளது. ஜூன்15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் என்னதான் நடந்தது என்பதற்கான பதிலை எதிர்பார்க்கிறோம்.

பிரதமர் மோடி ஊடுருவல் இல்லை என்கிறார் ஆனால் இப்போது சீன துருப்புகள் பின்னால் சென்று விட்டன என்று செய்திகள் வருகின்றன, எப்படி ஊடுருவாமல் அவர்கள் பின்னால் சென்றிருக்க முடியும்?

இப்படிப்பட்ட கேள்விகளைத்தான் ராகுல் காந்தி கேட்கிறார். இதற்கெல்லாம் பதிலளிக்காமல் அரசு தொடர்ந்து மறுப்பு வழியில் சென்று கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி பாதுகாப்பு நிலைக்குழுவின் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை என்கிறார் நட்டா. போர் முனையில் நடக்கும் விஷயங்கள் தொடர்பாக நிலைக்குழு இங்கு முடிவெடுப்பதில்லையே. மேலும் பாதுகாப்பு நிலைக்குழுவா எல்லையில் போதிய அளவு ஆயுதங்கள் அல்லது ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ வீரர்கள் செல்லும் முடிவை எடுக்கிறது?

எனவே ராகுல் காந்தி தேசத்தையும் ராணுவத்தையும் இழிவு படுத்துகிறார் என்று நட்டா கூறுவது பொருந்தாது, ராகுல் காந்தி தேச நலனுக்காகத்தான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்.

ஒவ்வொரு இந்தியரும் அரசை நோக்கி கேள்விகள் எழுப்ப உரிமை உள்ளது, ராகுல் காந்திக்கும் ஜனநாயக உரிமை உள்ளது என்பது ஒருபுறம் இருந்தாலும் அவரது கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே கவனிக்கப்பட வேண்டியது. கல்வானின் நடந்தது போல் நம் விலைமதிப்பில்லா ராணுவ வீரர்களை நாம் இழக்கக் கூடாதல்லவா.” என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x