மலேசிய கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவு: பெங்களூருவில் உடல் அடக்கம்

மலேசிய கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவு: பெங்களூருவில் உடல் அடக்கம்
Updated on
1 min read

மலேசிய கவிவாணர் ஐ.உலகநாதன் பெங்களூருவில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

மலேசியாவில் உள்ள ஈப்போ நகரைச் சேர்ந்த கவிவாணர் ஐ.உலகநாதன் சிறுவயதிலே கவிதை இயற்றுவதில் சிறந்து விளங்கினார். 1966-ல் வெளியான இவரது ' சந்தன கிண்ணம்' நூலை தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா, தம்பிக்கு வரைந்த மடலில் பாராட்டியுள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் குடியேறிய ஐ.உலகநாதன் உலகத் தமிழ்க் கழகம், பெங்களூரு தமிழ்ச் சங்கம், திருக்குறள் மன்றம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார்.

வெண்பா,மரபு கவிதை இயற்றுவதில் வல்லவரான இவர் 'திருப்பம்' என்ற இலக்கிய இதழை நடத்தினார். 'தினசுடர்' மாலை நாளிதழில் அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து நீண்ட காலம் நாள்தோறும் கவிதை எழுதினார்.

பெங்களூருவில் ஏரிக்கரை கவியரங்கம், பாவாணர் பாட்டரங்கம், பூங்கா கவியரங்கம் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கவிதை பாடியுள்ளார். முதுமைக் காலத்திலும் ஏராளமான புதிய கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

கவிவாணர் ஐ.உலகநாதன் திருப்பு முனைகள், செந்தமிழ்க் கவசம், புரட்சி தலைவர் புகழ் அந்தாதி, பாவாணர் புகழ்ச்சிந்து, உடைந்த வீணை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரது இலக்கிய பங்களிப்புக்காக தமிழக அரசு 'பாவேந்தர் விருது' வழங்கி கவுரவித்தது. இவரது படைப்புகள் பெங்களூரு மற்றும் மலேசிய‌ பல்கலைக் கழகங்களில் இளங்கலை தமிழ் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள லட்சுமி நாராயணபுர‌த்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த ஐ.உலகநாதன் (84) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு உலகத் தமிழ் கழக நிர்வாகிகள் சி.பூ.மணி, கர்நாடக அதிமுக இணை செயலாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்ட தமிழ் அமைப்பின‌ர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த ஐ.உலகநாதனின் உடல் இன்று பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்ட‌து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in