

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கர்நாடக மாநில அமைப்பு செயலாளர் தலித் நாகராஜ் (60) உடல் நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார்.
பெங்களூரு அருகேயுள்ள சிக்கசந்திராவை சேர்ந்த நாகராஜ் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளம்வயதில் தலித் அமைப்பில் இணைந்தார். தலித்துகள் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் நிலையில், அதையே தன் பெயரின் முன்னால் இணைத்துக்கொண்டு, துணிச்சலாக செயல்பட்டார்.
பன்னாருகட்டா பகுதியில் ஜி.டி.மரா, என்.எஸ். பாளையா ஆகிய இடங்களில் இருந்த குடிசைப்பகுதிகளை அரசு அகற்ற முயற்சித்த போது, மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த இவர், பின்னர் அக்கட்சியின் கர்நாடக மாநில அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
விசிக சார்பில் பெங்களூருவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசிக அமைப்பு செயலாளராக இருந்த நாகராஜ்இருமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கர்நாடகாவில் மொழி ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்ட போதும் அம்பேத்கரியத்தின் கீழ் கன்னடர், தமிழர், தெலுங்கர் உள்ளிட்டோரை அரவணைத்து இயங்கினார்.
தன் குடும்பத்தினருடன் வசித்த தலித் நாகராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று (திங்கள்) மாலை காலமானார்.
அவரது உடலுக்கு விசிக நிர்வாகிகளும், ஏராளமான தலித் மற்றும் தமிழ் அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தலித் நாகராஜின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தலித் நாகராஜின் மறைவுக்கு விசிக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, தென்னிந்திய பவுத்த சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.