

அன்னிய முதலீடுகள் மீதான புதிய கண்காணிப்புக் கொள்கைகளை அடுத்து சீன நிறுவனங்களின் 50 புதிய முதலீடு குறித்த முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிர ஆய்வு செய்து வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளின்படி அண்டைநாடுகளிலுள்ள நிறுவனங்களின் இந்திய முதலீடுகள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறைகளின்படி அரசு ஒப்புதலுடன் தான் முதலீடு அனுமதிக்கப்படும். புதிய முதலீடாக இருந்தாலும் சரி, கூடுதல் நிதி முதலீடாக இருந்தாலும் சரி மத்திய அரசின் அனுமதி அவசியம்.
சீனா பெரிய முதலீட்டாளர்கள் என்பதால் இந்த புதிய விதிமீது சீன நிறுவன முதலீட்டாளர்கள் கடும் விமர்சனம் வைத்துள்ளனர், அதாவது சீன நிறுவனங்களைத் தனிமைப்படுத்தி பாகுபாடு காட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சரிவடையும் நிறுவனங்களை கையகப்படுத்த சீனா முயற்சி செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.
மேலும் எல்லையில் சீனா இந்தியாவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருவதால் சீன முதலீடுகள் இயற்பாடு அடைய பெரிய அளவில் தாமதம் செய்யப்படுவதாகவும் சீன தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசு அனுமதிக்குப் பிறகே புதிய முதலீடோ, கூடுதல் முதலீடோ செய்ய முடியும் என்ற விதிமுறை வந்த பிறகு சீன முதலீட்டாளர் முதலீட்டு முன்மொழிவுகளுடன் 40-50 விண்ணப்பங்கள் மேற்கொண்டுள்ளதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விண்ணப்பங்கள்தான் பரிசீலனையில் உள்ளன.
சீனாவின் ஏற்கெனவே இருக்கும் முதலீடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முதலீடுகள் 26 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இருக்கு என்று ஆய்வு நிறுவனமான புரூக்ஸ் கடந்த மார்ச்சில் கூறியது குறிப்பிடத்தக்கது.