

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ளஎல்.ஜி பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மே மாதம் 7-ம் தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 15 பேர்உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல், தோல் வியாதி போன்றவை ஏற்பட்டன.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவின்பேரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் நீரப் குமார் தலைமையில் இந்த குழுவினர் நேரில்சென்று விசாரணையை மேற்கொண்டனர். நேற்று இதன் 350 பக்க விசாரணை அறிக்கையை நீரப் குமார் அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் செயல்படவில்லை. இங்குள்ள 36 சைரன்களும் சம்பவ நாளன்று செயல்பட வில்லை. எல்.ஜி பாலிமர்ஸில் எம்-6 டேங்கில் இந்த விஷவாயு கசிந்துள்ளது. இந்த டேங்கிலிருந்து வெளியேறும் ஸ்டெரெயின் வாயு நீராவியாக மாறியதால் அந்த டேங்கில் உஷ்ணம் அதிகரித்தது. இந்த விபத்துக்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே காரணம்.
சைரன் உட்பட எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. டேங்க் உட்பட மற்றஉபகரணங்களின் வடிவமைப்பிலும் குறைபாடுகள் உள்ளன.இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்து ஒருவிழிப்புணர்வு இல்லை.
ஸ்டெரெயின் மிக்ஸிங் குழாய்களிலும் சில குறைபாடுகள் உள்ளன. இவற்றை மராமத்து செய்ய நிர்வாகம் தவறி விட்டது.கரோனா ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளையும் இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடை பிடிக்கவில்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது.