

வெளிமாநிலத்திற்கு சென்று வர இனி இ-பாஸ் இல்லை என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் இன்று 193 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 167 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 92 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 65 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். க
கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 35 பேருக்கு இன்று நோய் பரவியுள்ளது. இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 87 வயதான முகமது என்பவரும், எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 65 வயதான யூசுப் என்பவரும் இன்று கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 26 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 25 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 15 பேர் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 14 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 11 பேர் கொல்லம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 8 பேர் பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், 7 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், தலா 6 பேர் காசர்கோடு, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் குணமடைந்தவர்களில் 33 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 27 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், தலா 16 பேர் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், 13 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 12 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 11 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 10 பேர் கொல்லம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 7 பேர் திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 5 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 9,927 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை கேரளாவில் 5,622 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 2,252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,83,291 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,975 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 384 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,04,452 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,179 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.
சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 60,006 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 57,804 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. கேரளாவில் தினமும் நடத்தப்படும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2,75,823 பேருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் தற்போது 157 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரள எல்லைகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வெளி மாநிலத்திற்கு தினசரி சென்றுவர இனிமேல் பாஸ் வழங்கப்படமாட்டாது. குறிப்பாக காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரத்தில் இருந்து தினமும் கர்நாடகாவிலுள்ள மங்களூருக்கு பணிக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு தினமும் செல்பவர்கள் மாதத்திற்கு ஒருமுறை சென்று வரும் வகையில் தங்களது பணியை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். வெளி மாநிலத்திற்கு சென்று வருவதால் நோய் அதிகரித்து வருகிறது. இதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐடி துறைகளில் குறைந்த ஊழியர்களை வைத்து அலுவலகங்களை நடத்தவேண்டும். இதேபோல அமைச்சர்களின் அலுவலகங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்து செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்தப்படும். கேரளாவில் துணை ராணுவத்தை சேர்ந்த 104 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. மாநில தலைநகரம் என்பதால் திருவனந்தபுரத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டுடன் சேர்ந்த மாவட்டம் என்பதால் தமிழ்நாட்டில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வியாபாரத்திற்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வந்து செல்கின்றனர். எனவே இவர்களுக்கு நோய் பரவினால் அது மேலும் பல பகுதிகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. இதனால் தான் திருவனந்தபுரம் நகரப் பகுதியில் இன்று முதல் மும்மடங்கு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
கடந்த மே 3-ம் தேதி வரை திருவனந்தபுரம் மாவட்டத்தில் 17 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். இதில் 12 பேரும் கேரளாவை விட்டு வெளியிலிருந்து வந்தவர்கள் ஆவர். 5 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. ஆனால் மே 4ஆம் தேதி முதல் இதுவரை 277 பேருக்கு நோய் பரவி உள்ளது.
இதில் 216 பேரும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். இவர்களில் 61 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இவ்வாறு நோய் பரவுவது மிகவும் ஆபத்தாகும். நேற்று நோய் உறுதி செய்யப்பட்ட 27 பேரில் 22 பேருக்கும் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் பலருக்கு எங்கிருந்து நோய் பரவியது என கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வது மிக அவசியமாகும்.
இவ்வாறு முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.