ஆகஸ்ட் 15-ல் கோவிட்-19 வாக்சின் என்பதில் ஏதாவது அறிவியல் அடிப்படை உள்ளதா? : கபில் சிபல் கடும் கேலி

ஆகஸ்ட் 15-ல் கோவிட்-19 வாக்சின் என்பதில் ஏதாவது அறிவியல் அடிப்படை உள்ளதா? : கபில் சிபல் கடும் கேலி

Published on

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் கோருவதில் எந்த வித அறிவியல்தன்மையும் இல்லை, இது பெரும் தவறு என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்தார்.

பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசி முதற்கட்ட, 2ம் கட்ட ஆய்வுகளுடனேயே அரங்கேற்றுவது பெருந்தவறு என்று ஏற்கெனவே நிபுணர்கள் விமர்சனம் வைத்தனர்.

ஆனால் ஆகஸ்ட் 15 இறுதிக் கெடு பற்றி ஐசிஎம்ஆர் எந்த விளக்கமும் அளிக்காமல், ரெட் டேப்பிசம் என்று அழைக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் இதற்கான இடையூறுகளை ஏற்படுத்துவதான கோப்புகளை மெதுவே நகர்த்துதல் போன்றவற்றிலிருந்து ஆய்வை மீட்டு துரிதப்படுத்துவதற்காகத்தான் அவசரம் காட்டுவதாக ஐசிஎம்ஆர். விளக்கம் அளித்தது.

உலகச் சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனும் பல ஆயிரக்கணக்கானோருக்கு கொடுத்து சோதித்து திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் 3ம் கட்ட மருத்துவ சோதனைகளை நடத்தாமல் அறிமுகம் செய்வது நல்லதல்ல என்று எச்சரித்தார்.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், “அறிவியல்பூர்வமற்ற தவறுகள்: ஐசிஎம்ஆர் கோரல்கள்: கோவிட்-19 வாக்சின் ஆகஸ்ட் 15-ல், 18 நாட்களில் மகாபாரதப் போர் வெல்லப்பட்டது; 21 நாட்கள் காத்திருங்கள் இந்தப் போரில் வெல்வோம், கரோனா போ கரோனா போ கோஷங்கள்.. பசுச்சாணம் புற்றுநோயைக் குணமாக்கும்.. பிள்ளையார் தலை: அறுவைசிகிச்சையின் அதிசயம்... இப்படியெல்லாம் கூறும் மனங்கள் நிச்சயம் தீர்வு வழங்க இயலாது”

இவ்வாறு கபில் சிபல் சாடினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in