Published : 06 Jul 2020 08:32 AM
Last Updated : 06 Jul 2020 08:32 AM

நாட்டில் முதல்முறையாக ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு

நாட்டில் முதல்முறையாக வெட்டுக்கிளிகளை அழிக்க, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ஜெய்சால்மரில் உள்ள வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ராஜேஷ் குமார் கூறியதாவது:

பார்மர் மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர், 250 லிட்டர் பூச்சி மருந்துடன் பாந்தா பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்த வெட்டுக்கிளிகளை அழித்தது. முன்னதாக மருந்து தெளிக்கும் பகுதியில் இருந்து விலகியிருங்கள், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் அடைத்து வையுங்கள் என கிராம மக்களை கேட்டுக்கொண்டோம். மற்ற பகுதிகளிலும் இப்பணி தொடர உள்ளது. ஹெலிகாப்டரில் 2 பக்கத்தில் இருந்து பூச்சி மருந்து தெளிக்க முடியும். 60 நாட்களில் கட்டாயம் 100 மணி நேரம் பறந்து மருந்து தெளிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளோம்.

மேலும் வெட்டுக்கிளிகளை அழிப்பது தொடர்பாக இந்திய விமானப் படை மற்றும் மத்திய வேளாண் அமைச்சகம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக எம்ஐ-17 ரக 3 ஹெலிகாப்டர்களில் விமானப் படை மாற்றங்களை செய்துள்ளது. மூன்றில் 1 ஹெலிகாப்டர் ஜெய்சால்மர் வரவுள்ளது. இதன் மூலம் வெறும் 40 நிமிடத்தில் 750 ஹெக்டேர் பரப்பளவில் 800 லிட்டர் பூச்சி மருந்து தெளிக்க முடியும்.

இதுதவிர ஸ்பிரேயருடன் கூடிய 55 புதிய வாகனங்கள் ஜெய்சால்மர் வந்துள்ளன. மேலும்வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த லண்டனில் இருந்து வந்துள்ள 60 இயந்திரங்களில் 15 ராஜஸ்தானுக்கு தரப்பட்டுள்ளது. இவற்றில் சில ஜெய்சால்மர் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x