

லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் எந்த சவாலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளன.
கடந்த மாதம் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் தாக்குதல் சம்பவங்கள் நின்றாலும், இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. லடாக்கில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்தியா விமானப் படை விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அங்கு விமானப் படை எப்படி செயல்படுகிறது என்பதை விமானப் படை அதிகாரிகள் விளக்கினர்.
சீன எல்லையையொட்டி, தாக்குதலுக்கு தயார் நிலையில் போர் விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன. இந்தியா வாங்கியுள்ள அமெரிக்க மற்றும் ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் அங்கு வீரர்களையும் சரக்குகளையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென அங்கே பிரத்யேகமாக விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறும்போது ‘‘இந்தப் பகுதியில் ராணுவ செயல்பாடுகளுக்கு இந்த விமான தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய சூழலில் போர்களில் விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய விமானப் படை முழு அளவில் ஆயத்தமாகவும் எந்த சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளது’’ என்றார்.