சீனாவுடனான போரில் வெற்றி பெறுவோம்: குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி

சீனாவுடனான போரில் வெற்றி பெறுவோம்: குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி
Updated on
2 min read

சீனாவுடனான போரில் இந்தியா வெற்றி பெறும் என்று குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்தார். மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் சிவாஜி பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

சீனாவுடனான போரில் இந்தியாவே வெற்றி பெறும். இதில்எந்த சந்தேகமும் இல்லை. நாம் வேறு நாட்டின் நிலப்பகுதியை ஆக்கிரமிக்கவில்லை. நமது மண்ணில் நின்று போரிடுகிறோம். நம் பக்கம், தர்மம் உள்ளது.

இந்தியா - சீனா இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும், போர்க் களம் தீர்வாகாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

நம்பிக்கை துரோகம்

கொரிய போர் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் நடைமுறையில் சீனாவுக்கு இந்தியா பெரிதும் உதவியது. பிரான்ஸ்-வியட்நாம் போர் தொடர்பாக கடந்த 1954-ம் ஆண்டில் நடந்த மாநாட்டிலும் சீனாவுடனான நட்புறவை இந்தியா உறுதி செய்தது. ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பாண்டுங் மாநாட்டில் சீன பிரதமர் சோ என் லையை, இந்திய பிரதமர் நேருவே அறிமுகம் செய்து வைத்து பேசினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.நா. சபை, யுனெஸ்கோவில் சீனாவின் அங்கீகாரத்துக்காக இந்தியா குரல் கொடுத்தது.

ஆரம்பம் முதலே சீனாவுடன் இந்தியா, நட்புறவைப் பேணி வந்தது. நட்பு நாடு என்று நம்பியது. அந்த நட்பு நாடு மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்பதை கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது ஒன்று புரிகிறது. சீனா உதட்டளவில் மட்டுமே நட்புறவைப் பேசுகிறது. நடைமுறையில் நஞ்சை, வஞ்சகத்தை கக்குகிறது. மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருக்கிறது.

எதிரிகளுக்கு பேரதிர்ச்சி

சீனாவுடனான போரில் இந்தியா வெற்றி வாகை சூடுவது உறுதி. அதற்கு அனைத்து தரப்பு மக்களும் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். சாதி,சமுதாயம், மதம் என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். நமது எதிரிகளுக்கு பேரதிர்ச்சி அளிக்க வேண்டும். நாம் ஒன்றாக எழுந்தால் யாராலும் நம்மை எதிர்க்க முடியாது. சீனாவுடனான பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தாய்நாட்டின் மீது இந்தியர்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அந்த அன்பு, பாசம், தேசப்பற்றை யாராலும் அசைக்க முடியாது. இக்கட்டான இந்த நேரத்தில் நமது சின்னஞ்சிறு சச்சரவுகளை புறந்தள்ளிவிட வேண்டும். எல்லையில் நமது வீரர்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்து வருகின்றனர். அவர்களின் தியாகத்தை மறந்து விடக்கூடாது. இப்போதைய துன்பங்கள், துயரங்கள் கடந்து போகும். இன்று என்சிசி தினம். உடல்திறன் உள்ள அனைத்து மாணவர்களும் என்சிசி படையில் சேர முன்வர வேண்டும். இதன்மூலம் உங்களின் தைரியம், திடமான மனப்பான்மை, உறுதிப்பாடு அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் தலைமைப் பண்பும் மேம்படும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின்போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in