Published : 06 Jul 2020 06:35 AM
Last Updated : 06 Jul 2020 06:35 AM

சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா: இதுவரை 6.90 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று; 4 லட்சம் பேர் குணமடைந்தனர்

சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் இருந்த இந்தியா நேற்று 3-வது இடத்துக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை 6 லட்சத்து 90,396 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண் டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. சர்வதேச அளவிலான வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 29.37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் பிரேசில்

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் 15.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு 64 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல், ரஷ்யாவில் இதுவரை 6.81 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 10,161 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 வாரங்களாக இந்தியா 4-வது இடத்தில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் கரோனா வைரஸ் புள்ளிவிவரங் களை திரட்டி வெளியிட்டு வரும் வேர்ல்டோ மீட்டர்ஸ் இணையதளம் நேற்றிரவு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், வைரஸ் பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் 6 லட்சத்து 90,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,380 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 8,671 பேர் உயிரிழந்துள்ளனர். 2-ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 11,151 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 97,200 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளி யிட்ட பாதிப்பு விவரம்:

உத்தர பிரதேசத்தில் 26,554, தெலங் கானாவில் 22,312, கர்நாடகாவில் 21,549, மேற்கு வங்கத்தில் 21,231, ராஜஸ் தானில் 19,532, ஆந்திராவில் 17,699, ஹரியாணாவில் 16,548, மத்திய பிரதேசத் தில் 14,604, பிஹாரில் 11,700, அசாமில் 10,668, ஒடிசாவில் 8,601, காஷ்மீரில் 8,246, பஞ்சாபில் 6,109 பேர், கேரளாவில் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..

நாடு முழுவதும் ஒரே நாளில் 24,850 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 613 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 9,083 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 2 லட் சத்து 44,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,150 பேர்

தமிழகத்தில் நேற்று 2,481 ஆண்கள், 1,669 பெண்கள் என மொத்தம் 4,150 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,077 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சம்

அதிகபட்சமாக சென்னையில் 1,713 பேருக்கும் மதுரையில் 308 பேருக்கும் செங்கல்பட்டில் 274 பேருக்கும் திரு வள்ளூரில் 209 பேருக்கும் வேலூரில் 179 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும் திருவண்ணாமலையில் 141 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற் பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் என நேற்று மட்டும் 60 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் இறப்புக்கு கரோனா பாதிப்பு மட்டுமே காரணம். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,054 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை சென்னையில் 42,309 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 62,778 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,186 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போதைய நிலையில், சென்னையில் 24,890 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 46,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை யில் 68,254 பேரும் செங்கல்பட்டில் 6,633 பேரும் திருவள்ளூரில் 4,806 பேரும் மதுரையில் 4,085 பேரும் காஞ்சிபுரத்தில் 2,547 பேரும் திருவண்ணாமலையில் 2,497 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1 லட்சம் பிசிஆர் கருவிகள்

கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 49 அரசு மருத்துவமனைகள், 46 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 13 லட்சத்து 41,715 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 34,831 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து 15.50 லட்சம் பிசிஆர் கருவிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அதில் தற்போது, 5.60 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. மேலும், 10 லட்சம் பிசிஆர் கருவிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருந்தது.

இதன்படி முதல்கட்டமாக நேற்று 1 லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னைக்கு வந்தன. மீதமுள்ள 9 லட்சம் கருவிகள் விரைவில் தமிழகம் வரும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை அறிக்கை

சென்னையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 236 பேரின் விவரங்களை மாநகராட்சி தெரிவிக்காமல் இருந்ததை பொது சுகாதாரத் துறை அதி காரிகள் ஆய்வின்போது கண்டறிந்தனர். இதேபோல், பெரம்பூர் ரயில்வே மருத் துவமனையில் இறந்த 20 பேர் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கரோனா வைரஸ் இறப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு அமைக் கப்பட்டது. இக்குழு விசாரணையை முடித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ பாதிப்பு

கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அம்மன் கே.அர்ஜுனனின் மகள், மருமகன், பேத்திக்கு கடந்த வாரம் தொற்று உறுதியான நிலையில், தற்போது அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளியூர்களில் இருந்து கோவை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x