

பாரத் பயோடெக் நிறுவனத்தின் உள்நாட்டுத் தயாரிப்பான கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் சோதனைகளை துரிதப்படுத்தி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியதை அடுத்து நிபுணர்கள் பலரும் அவசரம் கூடாது என்று எச்சரித்தனர்.
இந்த வாக்சின் மற்றும் இதன் சோதனைகளின் துரித நடவடிக்கைகள் குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு உலகச் சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் மின்னஞ்சல் பதிலில் கூறும்போது, “வாக்சின் ஒன்றை அதன் முதல் கட்ட சோதனையிலிருந்து 3ம் கட்ட சோதனைகளுக்குக் கொண்டு செல்ல உண்மையில் 6 முதல் 9 மாதங்கள் வரைத் தேவைப்படும். அதாவது இது அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இந்தக் காலக்கெடு சரியானதாக இருக்கும்” என்றார்.
பாரத் பயோ டெக் நிறுவனம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுப் பரிசோதனைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ற்குள் முடித்து அறிமுகம் செய்தாக வேண்டும் என்று அவசரம் காட்டினால் அதிக நோயாளிகளுக்குக் கொடுத்து அதன் வேலை செய்யும் திறனையும் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் 3ம் கட்ட சோதனை நடக்காமலே அறிமுகம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
இதனையடுத்து 3ம் கட்ட சோதனைகளை கைவிட்டு விட்டு வாக்சின் அறிமுகம் செய்யப்படலாமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சவுமியா சுவாமிநாதன், “எந்த ஒரு வாக்சினும் ஒரு குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கை கொண்ட பங்கேற்பாளர்கள் மூலம் சோதிக்கப்பட்டு திறனும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவது அவசியம். கோவிட்-19 வாக்சின்களுக்கென்றே உலகச் சுகாதார அமைப்பு சில வழிமுறைகளை நிர்ணயித்துள்ளது. எனவே அதன் நோய் எதிர்ப்பாற்றல் தன்மை மட்டுமே அதனைப் பயன்படுத்துவதற்கான ஒரு காரணமாக அமையவியலாது.
இரண்டாம் கட்ட சோதனைகளிலிருந்து 3ம் கட்ட சோதனைக்கு இடைக்கால தரவு பகுப்பாய்வு மேற்கொண்டு இயல்பாக நகர வேண்டும்.
பெருந்தொற்று நம்மை வாக்சின் தயாரிப்பதற்கான முன்னெப்போதும் இல்லாத தேவையை உருவாக்கியுள்ளது. அதனால்தான் உலகச் சுகாதார அமைப்பு ‘கோவிட்-19 உபகரணங்களுக்கான அணுக்கம்’ என்பதை அறிமுகம் செய்தது, கிளினிக்கல் சோதனைகள் அறிவியல் கறார் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பு மற்றும் திறன் முக்கியம், தயாரிப்பு நிலையில் கால அவகாசத்தை குறைத்துக் கொள்ளலாம். தொற்று அதிகம் உள்ள இடங்களில் வாக்சின் சோதனைகள் நடத்தப்படுவதன் மூலம் குறுகிய காலத்தில் தேவையான விவரங்களை திரட்டி கொள்ள முடியும்.
எந்த ஒரு வாக்சினாக இருந்தாலும் பெரிய மக்கள் தொகையிடத்தில் பயன்படுத்தப்படும் முன்பாக நிச்சயம் பரிசோதனைகளை கறாராக மேற்கொள்வது அவசியம். உலகச் சுகாதார அமைப்பு உலகம் முழுதும் வாக்சின் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது அதாவது அறிவியல் முறைகள் கறாராகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான். மேலும் பலநாடுகளில் கிளினிக்கல் சோதனைகள் நடக்க வசதி செய்து தரவும்தான் அறிவியல் முறைகளைக் கறாராக வலியுறுத்துகிறோம்.
இந்தியாவின் விஞ்ஞான அமைப்புகளுக்கு தேசியச் சவால்கள் தருணத்தில் எழுச்சி பெற்றதற்கான நீண்ட வரலாறு உள்ளது. இதன் மூலம் தேவையான சமயத்தில் மருந்துகளை வழங்கியுள்ளது. யூனிசெஃப் வைத்திருக்கும் பாதி வாக்சின்கள் இந்திய தயாரிப்பாளர்கள் அனுப்பியதே. இந்திய பொதுத்துறை தனியார் துறையில் இருக்கும் திறமைகளைப் பார்க்கும் போது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்சின்கள் நிச்சயம் இந்தியாவிலிருந்து வரும் என்று நான் உறுதிபட நம்புகிறேன்” என்கிறார் சவுமியா சுவாமிநாதன்.