

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்சவுதி அரேபியாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஒப்பந்த விமானங்களில் 14 பயணிகள் நேற்று காலை வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பயணிகள் கொண்டு வந்தபைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் குறித்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அதுபற்றி கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அந்தப் பைகளை சோதனையிட்டனர். அப்போது, சவுதி அரேபியாவில் இருந்து வந்த 11 பேரிடம் இருந்து22.65 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 3 பேரிடம் இருந்து 9.3 கிலோ தங்கமும் என ஏறத்தாழ 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 14 பேரும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.15.67 கோடி. தங்கத்தை கடத்தி வந்தவர்களிடம், யாருக்காக கடத்தி வந்தனர், எங்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.