Published : 05 Jul 2020 08:29 AM
Last Updated : 05 Jul 2020 08:29 AM

கரோனா வைரஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கிய 5 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர்

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவலை தடுக்க சர்வதேச விமான சேவைரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் சிக்கிய லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து, அவர்களை அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி, கடந்த மே 7-ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள், கடற்படை கப்பல்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 137 நாடுகளில் இருந்து 5 லட்சத்து 3 ஆயிரத்து 990 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் அதிகப்படியானோர் கேரளா (94,085), உத்தரபிரதேசம், பிஹார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா,குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுபோல, அதிக அளவாகஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 57,305 பேர் நாடு திரும்பினர். அடுத்தபடியாக, முறையே குவைத், கத்தார், ஓமன், சவுதிஅரேபியா மற்றும் அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் தாயகம் திரும்பி உள்ளனர்.

இந்தியர்களை அழைத்து வருவதில் 860 ஏர் இந்தியா விமானங்கள், 1,256 ஒப்பந்த விமானங்கள் மற்றும் 8 கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x