

குஜராத்தில் பொது சேவை மையத்தை நடத்தி வரும் ஜோயா கான் என்பவர் இந்த மையத்தில் தொலை மருத்துவம் (டெலிமெடிசின்) வழியாக நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற உதவுகிறார். நாட்டில் பொது சேவை மையம் நடத்தும் முதல் திருநங்கையான இவர் மத்திய அமைச்சரின் பாராட்டை பெற்றுள்ளார்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதன்வழியாக அரசின் சேவைகள், சமூக நல திட்டங்கள், மருத்துவ வசதி, கல்வி, விவசாய சேவைகள், நிதி சேவைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அவரவர் பகுதியிலிருந்தே பெற முடியும். இந்த மையங்கள் மூலம், நோயாளிகள் தொலை மருத்துவ ஆலோசனையையும் காணொலி முறையில் பெற முடியும். இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில். "குஜராத் மாநிலம் வடோதராவில் பொது சேவை மையம் நடத்தும் நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமைக்குரியவர் ஜோயா கான். இவர் இந்த மையத்தில், தொலை மருத்துவ முறையில் நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற உதவுகிறார். அவரது லட்சியம் திருநங்கைகள் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு பெறவும் சிறந்த வாய்ப்புகளை பெறவும் உதவுவதாகும்" என தெரிவித்துள்ளார். மேலும் பொது சேவை மையத்தில் ஜோயா கான் வேலையில் ஈடுபட்டவாறு இருக்கும் படங்களையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார்.