பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்கு

பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்கு
Updated on
1 min read

பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்தவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக இருப்பவர் பி.கே. மிஸ்ரா. இவரது சிறப்பு உதவியாளர் ஜிதேந்திரகுமார் என்று கூறிக்கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் போயிங் இந்தியா நிறுவனத்துக்கு ஒருவர் போன் செய்துள்ளார். மேலும் போயிங் நிறுவனத்துடன் நடந்த பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான தகவல்களையும் அவர் கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா ஆகியோரை போயிங் நிறுவன அதிகாரிகள் வந்து சந்திக்குமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து, போயிங் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி பிரவீணா யக்னாம்பட், பி.கே. மிஸ்ராவுக்கு இமெயில் மூலம் கடந்த நவம்பர் 5-ம் தேதி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த இமெயில், பிரதமர் அலுவலகத்திலிருந்து சிபிஐ-க்கு அனுப்பப்பட்டுள்ளது. புகாரைப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பி.கே.மிஸ்ராவின் சிறப்பு உதவியாளராக ஜிதேந்திர சிங் என்ற பெயரில் யாரும் இல்லை என்றும், அந்த பெயரில் போயிங் நிறுவனத்தை அணுகியது அனிருத் சிங் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) சிபிஐ பதிவு செய்துள்ளது.

பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்த நபர்கள் சிலரை கடந்த சில ஆண்டுகளில் சிபிஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in