Published : 05 Jul 2020 08:23 AM
Last Updated : 05 Jul 2020 08:23 AM

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு 2 வாரம் விமான சேவை ரத்து

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு நாளை முதல் 2 வாரங்களுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து நேற்று வெளியான அறிக்கையில், “டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு ஜூலை 6 முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்துக்கு வருந்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் 25-ல் தேசிய அளவிலான ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. பிறகு 2 மாதங்களுக்கு பிறகு மே 25-ல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் எழுதிய கடித்தில், “கரோனா வைரஸ் அதிகம் பாதித்த 5 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில் மற்றும் விமான சேவைகளை நிறுத்த வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை மட்டும் விமானங்களை இயக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x