

கரோனா நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை ஆகிய ஒருங்கிணைந்த நடவடிக்கையால், இன்று வரை, 1,58,793 பேர், கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட அதிகமாக குணமடைந்துள்ளனர்.
இதன் பயனாக, குணமடைந்தோர் விகிதம் 60.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 14,335 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து மொத்தம் 3,94,226 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
தற்போது, 2,35,433 பேர் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
நாட்டில் சோதனைக்கூடக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியே, நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகும். நாட்டில் தற்போது, 780 அரசு ஆய்வகங்கள், 307 தனியார் சோதனைக்கூடங்கள் உள்பட, 1087 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. அவை வருமாறு;
ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் ; 584 ( அரசு-366+ தனியார்- 218)
ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 412 ( அரசு- 381+ தனியார்-31)
சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 91( அரசு-33+ தனியார்-58)
‘’சோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல்’’ உத்தியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் மக்களை மையப்படுத்திய பல்வேறு நடவடிக்கைகள் கோவிட்-19 சோதனையில் காணப்பட்ட இடையூறுகளை அகற்றியுள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பரவலான பரிசோதனை வசதிகள் காரணமாக, ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 2,42,383 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை , மொத்தம் 95,40,132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.