

கரோனா வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, அடுத்த வாரம் சீனா செல்கிறது.
கரோனா வைரஸ் குறித்த சரியான தகவல்களை உரிய நேரத்தில் தர சீனா தவறிவிட்டதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நோயால் உலகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வூஹான் நகர சுகாதாரக் குழு சீனாவில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக 6 மாதங்களுக்கு முன்னதாகக் கூறியதாக சீனாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ''கரோனா வைரஸின் ஆதிமூலம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
எவ்வாறு விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குத் தொற்று ஏற்பட்டது? வவ்வால்களிடம் இருந்து நேரடியாக மனிதருக்குத் தோன்றியதா அல்லது இடைப்பட்ட மிருகங்கள் மூலமாகத் தொற்று உருவானதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். கரோனா வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக எங்கள் குழு அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளது.
இந்த வைரஸ் எங்கிருந்து, எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றாலும் கரோனா வைரஸ் வரிசைகள் வவ்வால் வைரஸ்களுடன் ஒத்துப்போகின்றன. இதுவரை 500 வகையான கரோனா வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்பகுதி சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் கரோனா வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றித் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.