Last Updated : 04 Jul, 2020 01:54 PM

 

Published : 04 Jul 2020 01:54 PM
Last Updated : 04 Jul 2020 01:54 PM

உ.பி. கிரிமினல்களுடன் 40 வருடங்களாகத் தொடரும் துப்பாக்கி சண்டை: அரசியல்வாதிகள் ஆதரவால் பலியாகும் போலீஸார் மீதான ஒரு மீள்பார்வை

புதுடெல்லி

உத்திரப்பிரதேச கிரிமினல்களுடன் கடந்த 40 வருடங்களாக போலீஸாரின் துப்பாக்கி சண்டை தொடருகிறது. இதன் பின்னணியில் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல்வாதிகள் ஆதரவால் போலீஸார் பலியாகி வருகின்றனர்.

உ.பி.யின் கான்பூரில் போலீஸாருக்கும் கிரிமினல் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சம்பவத்தில் டிஎஸ்பி, 3 துணை ஆய்வாளர்கள் மற்றும் 4 காவலர்கள் பரிதாபமாகப் பலியாகினர்.

போலீஸார் மீது உ.பி கிரிமினல்கள் இதுபோல், சிறிதும் அச்சமின்றி குண்டுகளை பொழிய அதன் அரசியல்வாதிகள் ஆதரவு எனக் கருதப்படுகிறது. இதற்கு ஆதாரமாக உபியின் கடந்த காலங்களில் நடைபெற்ற துப்பாக்கி சண்டைகள் அதன் காவல்துறையினரால் நினைவுகூறப்படுகின்றன.

உ.பியில் இந்த துப்பாக்கி சண்டைகளை துவக்கி வைத்தவர்கள் அதன் சம்பல் கொள்ளைக்காரர்கள். கடந்த செப்டம்பர் 21, 1981 இல் ஏட்டாவின் அலிகன்ச் காவல்நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் அதன் ஆய்வாளர் ராஜ்பால் சிங் உள்ளிட்ட 11 காவலர்கள் பலியாகினர்.

இதை செய்தவர் சுமார் 100 சகாக்களுடன் கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த சவிராம் என்றழைக்கப்பட்ட ரகுவீர்சிங் யாதவ்(42). இதற்கு சம்பல் பகுதியில் ஒளிந்தபடி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அவரை ஆய்வாளர் ராஜ்பால்சிங் பிடிக்க முயன்றது காரணமாக இருந்தது.

அந்த சமயங்களின் 60 கிராமங்களை தன்வசம் வைத்துக் கொண்டு தேர்தல்களில் சவிராம் கைகாட்டும் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இதனால், குறிப்பிட்ட கட்சிகளின் அரசியல்வாதிகள் ஆதரவு கொள்ளைக்காரன் சவிராமிற்கு தொடர்ந்தன.

இதன் பிறகும் சவிராமை பிடிக்க முடியாமல் உ.பி போலீஸார் திணறினர். மொத்தம் 24 பேர் அவனால் கொல்லப்பட்டனர். கடைசியாக மார்ச் 3, 2013 இல் உ.பியின் மெயின்புரியில் 600 போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு நடந்த துப்பாக்கி சண்டையில் சவிராம் கொல்லப்பட்டான்.

இதற்கு அடுத்தபடியாக மற்றொரு சம்பல் கொள்ளைக்காரனான தத்துவா எனப்பட்ட ஷிவ்குமார் பட்டேலால் ஒரு பயங்கரம் ஜூலை 23, 2007 இல் அரங்கேறியது. மிகவும் முக்கியமான சம்பல் கொள்ளைக்காரனான தத்துவாவை பல ஆண்டுகளாகப் பிடிக்க முடியாமல் இருந்தது.

இதற்கு அவனுக்கு உபி அரசியல் கட்சி தலைவர்களுடன் இருந்த நெர்ங்கிய உறவுகள் காரணம். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துக் கொண்டிருந்த தத்துவா, ஒரு கட்டத்தில் தன் சகோதரனையே எம்எல்ஏவாக்கினான்.

பிறகு அவனுக்கு எதிரான அரசியல் சூழலில் தத்துவாவை சித்ரகுட் பகுதியின் சம்பல் காட்டினுள் உபியின் அதிரடிப்படையினர் துப்பாக்கி சண்டையிட்டு கொன்றனர். அவனது உடலுடன் திரும்பியவர்களை பழிவாங்க தத்துவாவின் நெருங்கிய சகாவான தோக்கியா எனப்படும் அம்பிகா பட்டேல் வழியில் மடக்கினான்.

இவர்கள் இருதரப்பிலும் இரவு முழுக்க நீட்டித்த துப்பாக்கி சண்டையில் உபி அதிரடிப்படையின் ஆறு கமாண்டோக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மறுவருடம் உபி போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட தோக்கியாவிற்கு அவனது மரணத்திற்கு பிறகும் அரசியல் ஆதரவு தொடர்ந்தது.

இதனால், தோக்கியாவுடனான துப்பாக்கி சண்டையில் கவனக்குறைவாக இருந்ததாக அதிரடிப்படையினர் மீது புகார் ஆளும் கட்சி புகார் எழுப்பியது. இத்துடன் அப்படையின் டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பல வருடங்கள் விசாரணையை சந்திக்க நேரிட்டது.

சம்பல் கொள்ளைக்காரர்கள் உபி அரசியல்வாதிகளிடம் பெற்ற செல்வாக்கு ஒரு கட்டத்தில் நகர்புறக் கிரிமினல்களுக்கு

மாறியது. இதனாலும் உபி போலீஸார் அரசியல்வாதிகள் செய்த தவறுகளால் பலியாவது தொடர்ந்தது.

மார்ச் 3, 2013 இல் உபியின் பிரதாப்கரில் கிரிமினல்களை பிடிக்கச் சென்ற டிஎஸ்பியான ஜியா உல் ஹக் தலைமையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஜியா சுட்டுக் கொல்லப்பட்டதுடன், சகப்போலீஸார் குண்டுகளால் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமாக அங்கு சுயேச்சையாக பலமுறை எம்எல்ஏவாக இருந்த ராஜா பைய்யா என்றழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை பலியான ஜியாவின் மனைவியான பர்வீன் ஆசாத் வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்.

ஆனால், உபியில் பல்வேறு சமயங்களில் கூட்டணிகளின் ஆட்சி கவிழவும், காப்பாற்றப்படவும் காரணமாக ராஜா பைய்யாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வழக்கை சிபிஐ விசாரித்தும் அரசியல் காரணங்களால் ராஜா பைய்யாவை சிக்காமல் தப்பியதாகப் புகார் நிலவியது.

ஜூன் 2, 2016 இல் மதுரா நகர எஸ்பி மற்றும் ஆய்வாளர் சந்தோஷ் யாதவ் கொல்லப்பட்டனர். இவர்கள் மதுராவில் ஜெய் குருதேவ் எனும் பிரபல சாதுவின் ஆதரவாளர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட 286 ஏக்கர் நிலப்பகுதியை நீதிமன்ற உத்தரவின்படி காலிசெய்ய சென்றிருந்தனர்.

இப்பகுதியின் தலைவனாக இருந்த ராம் விருக்ஷ் யாதவ் மதுரா அரசு நிர்வாகத்திற்கு இணையாக ஒரு தனி அரசு போல் செயல்பட்டு வந்தார். இவருக்கு ஆதரவாக அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருந்தனர்.

ஆகஸ்ட் 18, 2004 இல் உபியின் தலைநகரமான லக்னோவிலும் ஒரு அரசியல் ஆதரவு போலீஸ் படுகொலை நடைபெற்றது. இதில், உபி அதிரடிப்படையின் காவலர் தர்மேதிராசிங் என்பவர் அத்தீக் மற்றும் ரபீக் தலைமையிலான கும்பலால் பலியானார்.

இதற்கும் முன்பாக 1997 இல் ஸ்ரீபிரகாஷ் சுக்லா எனும் கிரிமினல் கும்பலின் தலைவனை லக்னோவின் ஹசரத்கன்ச் காவல்நிலைய ஆய்வாளர் ஆர்.கே.சிங் மடக்கிப் பிடித்தார். இவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு சுக்லா தப்பி ஓடினான்.

உபியின் காஜிபூரில் இரு கிரிமினல் அரசியல்வாதிகளின் சண்டயிலும் உபியின் இரண்டு பாதுகாப்பு போலீஸார் கொல்லப்பட்டனர். இவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பாஜக எம்எல்ஏவான கிருஷ்ணானந்த் ராயுடன் சேர்த்து கொல்லப்பட்டனர்.

இதுபோல், நீளும் பட்டியலில் கடைசியாக உபியின் புலந்த்ஷெஹரில் ஆய்வாளர் சுபோத்சிங் டிசம்பர் 3, 2018 இல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், அப்போது பசுமாடு கொல்லப்பட்டதன் பேரில் நிகழ்ந்த கலவரத்தை அடக்க முயன்ற போது கலவரக்காரர்களால் சுடப்பட்டு பலியானார்.

பாஜக ஆட்சியின் என்கவுண்டர்கள்

பாஜகவின் முதல்வராக யோகி ஆதித்யநாத் அமர்ந்த பின் கடந்த மார்ச் 20, 2017 க்கு பின் தொடர்ந்து இதுவரை 6143 என்கவுண்டர்கள் நடைபெற்றன. உ.பியின் ஒரு புள்ளிவிவரத்தின்படியான இதில், 13,241 கிரிமினல்கள் கைதானாலும் 113 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுண்டர்களில் 881 போலீஸார் படுகாயம் அடைந்தவர் தவிர ஒரிருவர் மட்டுமே பலியாகி இருந்தனர். இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்கு பின் கான்பூரின் கிரிமினலான விகாஸ் துபேவால் ஒரே சமயத்தில் 8 போலீஸார் பலி நிகழ்ந்துள்ளது.

இதன் பின்னணியில் விகாஸ் துபேவிற்கு உள்ள அரசியல் ஆதரவு காரணமாகக் கூறப்படுகிறது. தேர்தல்களில் போட்டியிடும் இப்பகுதியின் வேட்பாளர்கள் தம் பிரச்சாரத்தை விகாஸ் துபேயின் வீட்டில் இருந்து துவக்குவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உபியின் துப்பாக்கி சண்டைகளின் பின்னணியில் துவக்கம் முதல் இன்று வரை அரசியல்வாதிகள் ஆதரவே காரணம் எனத் தெரிகிறது. எனவே, அரசியல் ஆதரவு பெற்ற கிரிமினல் விகாஸ் துபேயை பிடிப்பதில் உபி போலீஸாரின் சவால்கள் கூடியுள்ளன.

உ.பி காவல்துறையிடம் இருந்த குறைகள்

இதுபோன்ற துப்பாக்கி சண்டைகளில் அதிக எண்ணிக்கையில் போலீஸார் பலியாக உ.பி போலீஸாரின் ஆயுதம் மற்றும் பயிற்சியில் குறைபாடுகள் இருந்ததும் காரணமாக இருந்தது. இதற்கு உதாரணமாக சம்பல் கொள்ளைக்காரர்களில் ஒருவரான கன்ஷிராம் கேவட்டுடன் 11 வருடங்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சண்டை நினைவு கூறப்படுகிறது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சம்பல் கொள்ளைக்காரன் கன்ஷிராம் கடந்த ஜூன் 16, 2009 இல் உபி அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டான். புந்தேல்கண்டின் சித்ரகுட்டின் ராஜாகன்ச் காவல்நிலையப் பகுதியின் ஒரு கிராமத்தில் ஒளிந்திருந்தவனுடன் உபி போலீஸார் 52 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடத்தினர்.

இதில், நம்பமுடியாதவகையில் உபியின் சுமார் 400 போலீஸாரை கொள்ளைக்காரனான கன்ஷிராம் கேவட் தனியாக நின்று துப்பாக்கி சண்டை இட்டிருந்தான். கடைசிவரை கன்ஷிராமை பிடிக்க முடியாமல் அக்கிராமத்தினரை உபி போலீஸார் காலி செய்ய வைத்தனர்.

பிறகு கிராமத்திற்கு வைக்கப்பட்ட தீயில் இருந்து தப்ப முயன்ற கன்ஷிராம் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் அந்த சமயங்களில் உ.பி காவல்துறையினரிடம் இருந்த குறைபாடுகளின் உதாரணமாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x