Published : 04 Jul 2020 10:28 AM
Last Updated : 04 Jul 2020 10:28 AM

3-வது முறையாக பிரதமர் மோடி சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை; இதன் மர்மம் என்ன?- ப.சிதம்பரம் கேள்வி 

சீனாவுடனான எல்லை மோதல் குறித்து பிரதமர் மோடி ஏன் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசுகிறார்? இதன் மர்மம் என்னவென்பதை யாராவது விளக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே உடன் சென்றனர். லே பகுதியில், தரைமட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில், உள்ள நிமு பகுதிக்கு, மோடி சென்றார். அப்போது, அங்கிருந்த வீரர்களிடையே உரையாற்றிய மோடி, ‛எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள், அதை கைவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது இதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், எல்லைகளை விரிவுபடுத்தும் காலங்களெல்லாம் மலையேறி விட்டது என்ற தொனியில் பேசினார் பிரதமர் மோடி.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்,

“முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?

இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?

பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?

ஒரு வாரத்தில் 3வது முறையாக சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியுள்ளார். பெயர் கூறாத விரோதி பற்றி இந்திய மக்களிடமும் ஜவான்களிடமும் பேச வேண்டிய நோக்கம் என்ன?

ட்ரம்ப், புதின் ஆகியோரிடம் பிரதமர் மோடி பேசும்போது சீன ஊடுருவுகிறது என்று குறிப்பிட்டாரா இல்லையா? எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று தொடர் ட்வீட்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x