

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்யாது என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
காணொலியில் மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசும்போது, சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து மின் சாதனங்கள் இறக்குமதிக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார்.
மாநில மின்சார வாரியங்கள் சீன நிறுவனங்களிடமிருந்து மின் சாதனங்களைப் பெற அனுமதி மறுக்கப்படுகிறது என்றார் அவர்.
தற்சார்பு நிலையை வலியுறுத்திய ஆர்.கே.சிங், “2018-19-ல் இந்தியாவின் மின்சாதன இறக்குமதி ரூ.71,000 கோடியாகும். இதில் ரூ.20,000 கோடிக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நாட்டில் உற்பத்தி செய்ய முடியக்கூடிய வசதிகள் இருந்தும் சீன நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துறை சைபர் தாக்குதலுக்குள்ளாகும் என்பதால் ட்ரோஜான் போன்ற மால்வேர் எதுவும் உள்ளதா என்று இறக்குமதி சாதனங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்படும்.
2014 முதல் 20000 மெகாவாட் திறன் அதிகரிப்பு உட்பட நாட்டின் மின்சாரத் துறையில் பலதும் சாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே கிரிட் மூலம் இந்தியா முழுதையும் இணைப்பதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பவர் கிரிட் அமைப்பு உலக அளவில் சிறந்த தரம் கொண்டது.
மார்ச் 31ம் தேதி வரை ஏற்பட்ட நஷ்டத்தைச் சந்திக்க மின்விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 90,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் ரூ.93,000 கோடி கேட்டிருந்தன. யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் வரையிலான நஷ்டங்களை ஈடுகட்டுவதற்கான கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தீன் தயாள் உபாத்யாய கிராம் ஜோதி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மின்சார வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றை இணைத்த பிறகு புதிய திட்டம் ஒன்றை அறிவிக்கவிருக்கிறோம்.
சிகப்பு என்ற அடையாளத்தின் கீழ் உள்ள மாநில, யூனியன் பிரதேச மின் விநியோக நிறுவனங்கள் தவிர மற்றவர்களுக்கு நிதி வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. மற்றவர்கள் மீட்புத் திட்டத்தை வழங்க வேண்டும்.
1.85 லட்சம் மெகாவாட் தேவையை விடவும் அதிகமாக 3.7 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாம் பிற நாடுகளுக்கும் மின்சாரம் வழங்கி வருகிறோம்” என்றார் ஆர்.கே.சிங்.