

டெல்லியில் இதுவரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்..
இதனிடையே, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களோ அல்லது சுகாதாரப் பணியாளர்களோ, அந்தத் தொற்றுக்கு ஆளாகிஉயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் அசீம் குப்தா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவர் அசீம் குப்தா வீட்டுக்கு நேற்று சென்ற முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மருத்துவர் அசீம் குப்தாவின் தியாகம் விலைமதிப்பற்றது. அவரது உயிருக்கு எத்தகைய பெரிய தொகையும் ஈடாகாது. ஆனால், மக்களுக்காக உயிர் நீத்த அவரது குடும்பத்தினருக்கு ஆதரவு தர வேண்டியது நமது கடமை. அந்த வகையில், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படுகிறது” என கூறியுள்ளார்.