Published : 04 Jul 2020 08:21 AM
Last Updated : 04 Jul 2020 08:21 AM

வீட்டில் தனிமை காலத்தை முடித்தவர்களுக்கு மீண்டும் கரோனா சோதனை தேவையில்லை: மத்திய சுகாதார அமைச்சகம் புது அறிவிப்பு

புதுடெல்லி

வீடுகளில் தனிமை காலத்தை முடித்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் தனிமையில் இருக்கும் நோயாளிகள் தொடர்பான விதிமுறைகளில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், அறிகுறி தெரிந்து10 நாட்களுக்குப் பிறகும் 3 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இல்லாமலும் இருந்தால் தனிமையை முடித்துக் கொள்ளலாம். அதன் பிறகு வீட்டிலேயே மேலும் 7 நாட்களுக்கு சுயமாக தனது உடல்நிலையை கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று நோயாளிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அத்தகையோரும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்படுவோரும் மருத்துவ அதிகாரி அனுமதித்தால் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

எச்ஐவி கிருமி தொற்று நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள தகுதி உடையவர்கள் அல்ல. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலம் முடிந்த பிறகு சோதனை அவசியமில்லை.

கரோனா நோய்க்கான அறிகுறிஇல்லாதவர்கள் லேசான அறிகுறிஇருப்பதாகக் கருதினால், தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இருந்தால் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களுடனான தொடர்பை தவிர்க்க வீட்டிலேயேதங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் தனிமையில் உள்ள நோயாளிக்கு உதவ ஒரு நபர் எப்போதும் உடன் இருக்க வேண்டும். நோயாளிக்கு துணை புரியும் நபர்மருத்துவமனையுடன் தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரை தொடர்பில் இருப்பதும் அவசியம்.

நோயாளிக்கு துணையாக இருப்பவரும் நோயாளியுடன் தொடர்பு கொள்பவர்களும் கண்டிப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து அதை முழு நேரமும் செயல்பாட்டில் வைத்திருப்பதும் இன்றியமையாதது.

நோயாளிகள் தங்கள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து உடல்நிலை குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்குதெரியப்படுத்துவது அவசியம். இதன்மூலம் தொடர் சிகிச்சை பெறமுடியும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நோயாளி, குறிப்பிட்ட காலம் வரை சுயமாகவே தனிமைப்படுத்திக் கொள்ளத் தயார் எனவும் உறுதிமொழி தர வேண்டும்.

மூச்சு விடுவதில் சிரமம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல்உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை அணுகுவது அவசியம்.வீட்டுத்தனிமையில் உள்ள நோயாளிகள் பற்றி மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வீட்டுத் தனிமையில் உள்ளவர்களின் உடல்நிலையை கள ஊழியர்கள், கண்காணிப்பு குழுக்கள் மூலமாக தினசரி கண்காணிக்க வேண்டும்.

கரோனா தொடர்பான இணையத்திலும் அது சார்ந்த செயலியிலும் வீட்டுத் தனிமையில் இருக்கும் நோயாளிகள் விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறும் நோயாளிகளையும் சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளவர்களையும் உரிய இடத்துக்குமாற்றவும் தகுந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். வீட்டுத் தனிமையில் உள்ள நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து சோதனைக்கு உட்படுத்துவதும் கட்டாயமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x