

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையில் 41 சதவீதம் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவையாகும். இது தொடர்பாக மாநில அரசு தரப்பில் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் ஏப்ரல், மே, ஜூனில் 55 ஆயிரத்து 981 குடும்பங்களுக்கு 100 நாட்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 100 நாள் வேலை கிடைக்கப்பெற்ற மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 365 ஆகும்.
இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு 8 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் வேலை நாட்களை உருவாக்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வேலைவாய்ப்பு உருவாக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடும்போது அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி 2-வது இடத்தை பிடித்துள்ளது சத்தீஸ்கர்.
புள்ளிவிவரத்தின்படி ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்பு தருவதில் நக்சல்கள் பாதிப்பு மிக்க மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு வழங்க மாநிலத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிகபட்சம் வேலைவாய்ப்பு தரும் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 மாவட்டங்கள் பஸ்தார் பகுதியைச் சேர்ந்தவையாகும். நக்சல் பிரச்சினை அதிகமாக காணப்படும் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டம் வேலைவாய்ப்பு தருவதில் முன்னிலை வகிக்கிறது.