Published : 04 Jul 2020 07:43 AM
Last Updated : 04 Jul 2020 07:43 AM

லடாக்கில் மோடி பேச்சு | தவறாகக் கணக்கிட்டு விட வேண்டாம்: சீனா எச்சரிக்கை

சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியன்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று லடாக்கிற்கு திடீர் வருகை மேற்கொண்டு இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அப்போது சீனாவுக்கு உரைக்கும் விதமாக ‘எல்லை விரிவாக்க காலமெல்லாம் ஓய்ந்து விட்டது, இது வளர்ச்சிக்கான காலம்’ என்று பேசினார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை சீனா மறுதலித்து ‘சீனாவுக்கு எதிராக ராஜாங்க உறவுகளில் தவறனா கணக்கிடுதல் வேண்டாம் என்றும் எல்லை விரிவாக்கம் பற்றிய மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு, ‘மிகைப்படுத்தப்பட்டது, இட்டுக்கட்டப்பட்டது’ என்று கூறியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “சீனா தனது 14 அண்டைநாடுகளுடனான எல்லைகளில் 12 நாடுகளின் எல்லையை அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே வகுத்துள்ளது. நில எல்லைகளை நட்பு ரீதியான ஒற்றுமைக்கான பிணைப்புகளாக மாற்றியுள்ளோம்.

ஆகவே எல்லை விரிவாக்கத்தை சீனா மேற்கொள்வதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்டதும் இட்டுக்கட்டப்பட்டதுமாகும்.” என்றார்.

சீன வெளியுறவு அமைச்சகம் லடாக்கிற்கு மோடியின் வருகையைக் கண்டிக்கும் விதமாக, ‘எல்லையில் இந்தியா சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விடக்கூடாது. சீனாவும் இந்தியாவும் ராணுவ மற்றும் ராஜீய வழியின் மூலமாக தொடர்பில் இருக்கும் நாடுகள். இரு நாடுகளுமே எல்லையில் சூழ்நிலை சிக்கலாகும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது’ என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

“சீனாவுக்கு எதிராக தவறான கணக்கிடுதல்களில் இறங்கி விட வேண்டாம். இருநாட்டுத் தலைவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா விசுவாசமாகப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளும் பேச்சு வார்த்தை மூலமும் ஒத்துழைப்பு மூலமும் தற்போதைய சூழ்நிலையை மேலாண்மை செய்து இருநாடுகளும் இணைந்து எல்லையில் ஸ்திரத்தையும் அமைதியையும் ஏற்படுத்த முயற்சி செய்வதே நல்லது.

இந்தியாவும் சீனாவும் பெரிய வளரும் நாடுகள் தேச வளர்ச்சி மற்றும் புத்துணர்வாக்கம் என்ற வரலாற்றுப் பணி இருநாடுகளுக்கும் உள்ளது.

அதே போல் இருநாட்டு உறவுகளையும் பாதிக்குமாறு, பொருளாதார விவகாரத்தில் சமீபத்திய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது தேவையற்றது.

சமீபமாக இந்திய அரசியல்வாதிகள் சிலர் சீனாவுக்கு எதிராக பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். இது சீனா-இந்தியா உறவுகளுக்கு கேடு விளைவிக்கும். இந்திய-சீன உறவுகளை பராமரிக்கும் நோக்கத்துடன் இந்தியா செயல் படவேண்டும், ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளின் நலன்களை சீர்த்தூக்கும் விதமாக இருநாடுகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்த ஒத்துழைப்புக்கு இடையூறாக செயற்கையான முட்டுக்கட்டைகள் (செயலிகள் தடை, நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களை புறக்கணித்தல் என்ற நிதின் கட்கரியின் பேச்சு) உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதோடு இந்தியாவின் நலன்களையும் பாதிக்கும்.

சீன வர்த்தகங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க சீனா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். ” என்றார் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x