

திருவனந்தபுரத்தில் கரோனா தீவிரமடைவதாகவும் ஊரடங்கைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) நிருபர்களிடம் கூறியது:
’’கேரளாவில் இன்று 211 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 201 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 138 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 39 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர்.
கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 27 பேருக்கு இன்று நோய் பரவியுள்ளது. விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், ஒரு விமான ஊழியருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் தலைமைச் செயலக நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரருக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது நோயாளிகள் எண்ணிக்கை 200-ஐக் கடப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 23 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 21 பேர் ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், 18 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 17 பேர் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், தலா 14 பேர் பாலக்காடு கோட்டயம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா 7 பேர் காசர்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும், 2 பேர் இடுக்கி மாவட்டத்தையும், ஒருவர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் குணமடைந்தவர்களில் 68 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 29 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 20 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 16 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 13 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 12 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 11 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 10 பேர் மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், 5 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 2 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 7,306 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 4,964 பேருக்குக் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,098 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,77,011 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,894 மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 378 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 1, 71,773 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,834 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ள 53,922 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 51, 840 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கேரளாவில் தினமும் பரிசோதனைகள் நடத்தப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பல்வேறு வகையான 2,53,011 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் மொத்தம் 130 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் கடந்த சில தினங்களாக நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாம் பெரும் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.
நகர மற்றும் கிராம வித்தியாசம் இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நோய்ப் பரவல் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய நகரங்களிலும், மலப்புரம் மாவட்டம் பொன்னானி தாலுகாவிலும் நோய்ப் பரவல் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நோய் பரவுவதைத் தடுக்க வேண்டும். இதற்கு முன்பும் இதே போல ஒன்றாக இணைந்து போராடியதால்தான் உலக நாடுகள் வியக்கும் வகையில் நாம் நோயைக் கட்டுப்படுத்தி சாதனை படைத்தோம். ஆனாலும் கேரளாவில் சமீப நாட்களாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை ஒதுக்கி வைப்பது, தனிமையில் இருப்பவர்களின் வீடுகளைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவிலிருந்து கோட்டயத்திற்குத் தனது 7 மற்றும் 4 வயதான குழந்தைகளுடன் வந்த இளம்பெண்ணை 14 நாள் தனிமை முகாமில் இருந்த பிறகும் அவரது கணவன் வீட்டினரும், பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோய் குணமானவர்களிடம் இருந்து வேறு யாருக்கும் நோய் பரவாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நோயாளிகள் நமக்கு எதிரி அல்ல. நோய்தான் நமக்கு எதிரி ஆகும். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வேலை இழந்து இங்கு வருகின்றனர். அவர்களுக்கு நாம்தான் ஆதரவளிக்க வேண்டும். இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தனிமை முகாமில் இருப்பவர்கள் அல்லது வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது. வெளியே சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைநகரான திருவனந்தபுரத்தில் பல்வேறு அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு வணிக வளாகத்தில் பணிபுரியும் ஊழியர், லாட்டரி விற்பனையாளர், ஒரு மீன் வியாபாரி ஆகியோருக்கு நோய் பரவியுள்ளது. இவர்கள் தினமும் பலருடன் தொடர்பு கொள்பவர்கள் ஆவர். எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் ஊரடங்கு நிபந்தனைகளைக் கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம். தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல வாகன வசதி உறுதி செய்யப்படும். அவர்கள் நேரடியாக தங்களது வீடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். வழியில் வேறு எங்கும் செல்லக்கூடாது. இதைப் போலீசார் கண்காணிப்பார்கள்’’.
இவ்வாறு அவர் கூறினார்.