Published : 03 Jul 2020 08:56 PM
Last Updated : 03 Jul 2020 08:56 PM

புதிய அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கொள்கை 2020: ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி

புதிய அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கொள்கை 2020-ஐ உருவாக்குவதற்கான தொழில்துறை ஆலோசனை வட்டமேசையில் தொழிலகங்களின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

புதிய அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கொள்கை 2020-ஐ உருவாக்குவதற்கான உயர்மட்டத் தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர், பேராசிரியர் கே விஜயராகவன் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், பேராசிரியர் அசுதோஷ் சர்மா ஆகியோரிடம் தொழிலகங்களின் முன்னணித் தலைவர்கள் உரையாடினர். அப்போது ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிக அளவிலான தொழில்துறைப் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான வலிமையான கொள்கையை உருவாக்குவதற்கு வழிகளை ஆலோசித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் கே. விஜயராகவன், ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான முதலீட்டை அதிகரித்தல், அத்தகைய முதலீட்டில் இருந்து தொழில்களுக்கு நன்மைகளை உறுதி செய்தல் மற்றும் முதலீட்டு அபாயத்தைக் குறைக்கும் வழிகள் ஆகியவற்றுக்கான முற்றிலும் புதிய உத்திகள் குறித்த ஆலோசனைகளை வரவேற்றார்.

தொழில்துறைத் தலைவர்களிடம் உரையாற்றிய பேராசிரியர் அசுதோஷ் சர்மா, ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான முதலீட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டதோடு, ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான முதலீட்டை மட்டுமே தொழில்கள் செய்யாமல், அதிலிருந்து அதிக பலனடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். புதிய கொள்கையில் இருக்கும் இடைவெளியை நிரப்பும் வகையில், தொழில்துறையை கல்வித் துறையுடன் இணைக்கும் கூறுகளைக் கண்டறியுமாறு தொழில்துறை தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

பரவலாக்கப்பட்ட, கீழிருந்து மேல் நோக்கிய மற்றும் அனைத்தையும் உள்ளடிக்கிய வடிவமைப்பு செயல்முறையின் மூலம் முன்னுரிமைகளை மீட்டமைக்கவும், துறை ரீதியாக கவனம் செலுத்தவும் மற்றும் பெரிய அளவிலான சமூக- பொருளாதார நலனுக்கான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முறைகளுக்குமான அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கொள்கையை வடிவமைப்பதற்கான முதல் உயர்மட்ட தொழில்துறை ஆலோசனை இதுவாகும்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் அறிவியல் கொள்கைப் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் கொள்கை 2020 செயலகத்தால் இந்த வட்டமேசைக் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x