

இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் அனைவரது அகக் கண்களையும் இந்த தடை உத்தரவு திறந்திருக்கும்- யாசின் மாலிக்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், அவ்வாறு விற்பனை செய்யப்படாததை உறுதிப்படுத்தவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவுக்கு காஷ்மீரில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காஷ்மீரில் முழு அடைப்புக்கும், நாளை (சனிக்கிழமை) போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக், "காஷ்மீரில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்திருப்பது அரசியல் உள்நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் முடிவு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் அனைவரது அகக் கண்களையும் இந்த தடை உத்தரவு திறந்திருக்கும்" எனக் கூறியுள்ளார். மேலும், நாளை (சனிக்கிழமை) காஷ்மீரில் முழுஅடைப்புக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹூரியத் தலைவர் சையது அலி ஷா கிலானி "மாட்டு இறைச்சிக்கு தடை விதித்திருப்பது காஷ்மீரில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் திட்டமிட்டு அமல்படுத்தப்பட்ட முடிவு" எனக் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சியும் எதிர்ப்பு:
உயர் நீதிமன்ற உத்தரவு ஜம்மு காஷ்மீரின் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மெஹ்பூப் பெய்க் கூறும்போது, "மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. காஷ்மீர் மஹாராஜா ஆட்சியின்போது மாட்டு இறைச்சிக்கு தடை இருந்தது உண்மையே. முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் ஒரு மாநிலத்தில் இத்தகைய உத்தரவு அமலில் இருந்தது என்பதே வினோதமானது. அப்படி இருக்கையில் அந்த தடை உத்தரவை இத்தனை காலத்துக்குப் பின்னர் மீண்டும் அமல்படுத்துவது விவாதிக்கத்தக்கது" என்றார்.
வழக்கும்...உத்தரவும்...
வழக்கறிஞர் பரிமோக் ஷ்ஷேத் என்பவர் ஜம்மு காஷ்மீரில் மாட்டினங்களை இறைச்சிக்காக வதை செய்வது மற்றும் கொல்வதை ரண்பிர் தண்டனைச் சட்டம் (ஆர்பிசி) பிரிவுகள் 298-ஏ, 298-பி ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கக் கோரி பொது நல மனு தாக்கல் செய்தார்.
இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் திராஜ் சிங் தாகுர், ஜனக் ராஜ் கோத்வால் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு கடந்த விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
எந்த இடத்திலும் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யவும், அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், எஸ்எஸ்பி, எஸ்பி உட்பட அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும்’ என காவல்துறை தலைவருக்கு (டிஜிபி) நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நூற்றாண்டு சட்டம்
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு புதிதானது அல்ல. 150 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான சட்டம்தான் மீளாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து காரணமாக அங்கு இருவிதமான தண்டனைச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒன்று இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), மற்றொன்று ரண்பிர் தண்டனைச் சட்டம் (ஆர்பிசி). இரண்டின் பிரிவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. ஓரிரு சட்டங்கள் மட்டுமே மாறுபடும்.
ஆர்பிசி 298 ஏ பிரிவின்படி, உள்நோக்கத்துடன் பசு அல்லது எருது, எருமை போன்ற உயிரினங்களைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம். பிணையில் வெளிவரமுடியாத 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கக் கூடிய குற்றம்.
பிரிவு 298 பி, அத்தகைய இறைச்சியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். பிணையில் வெளியே வரமுடியாத, ஓராண்டு சிறையும் அபாரதமும் விதிக்கப்படக் கூடிய குற்றம்.
ஆர்பிசி சட்டமானது 1862-ம் ஆண்டு டோக்ரா மஹாராஜவால் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டில்தான் இந்தியாவில் ஐபிசி நடைமுறைக்கு வந்தது.