Published : 03 Jul 2020 13:40 pm

Updated : 03 Jul 2020 13:41 pm

 

Published : 03 Jul 2020 01:40 PM
Last Updated : 03 Jul 2020 01:41 PM

பணமதிப்பு நீக்கம், 370 பிரிவு ரத்து, மாநிலம் பிரிப்பு செய்தும் என்ன பலன் கிடைத்தது? ஜம்மு காஷ்மீர் சூழல் குறித்து சிவசேனா கேள்வி

despite-noteban-370-move-no-change-in-j-k-situation-sena
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி : கோப்புப் படம்

மும்பை

பணமதிப்பு நீக்கம், சிறப்பு உரிமைச் சட்டம் 370-வது பிரிவு ரத்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது எனப் பல நடவடிக்கைகள் எடுத்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலையில் முன்னேற்றம் இல்லையே, இந்த நடவடிக்கையால் என்ன பலன் கிடைத்தது என்று மத்திய அரசு்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் முதியவர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதி, அவரின் பேரனையும் கொல்ல முயன்றார். ஆனால், சிறுவனோ தனது தாத்தா இறந்தது கூடத் தெரியாமல் அவரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அவரை எழுப்ப முயன்ற காட்சி பலரையும் உலுக்கியது.

இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் பல்வேறு கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஜம்மு காஷ்மீர் மாநிலம் புதிதாகப் பிரிக்கப்பட்ட பின்பும், மத்தியில் வலிமையான பாஜக அரசு இருந்தும் இன்னும் அந்த மாநிலத்தில் அமைதி திரும்பாதது வியப்பாக இருக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்ட 370-வது பிரிவு நீக்கப்பட்டது, மாநிலம் நிர்வாக வசதிக்காக இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது, தீவிரவாதிகளிடம் கள்ளப் பணத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது. இத்தனையும் செய்து என்ன பலன், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சூழலில் முன்னேற்றம் இல்லையே?

நாள்தோறும் ஜம்மு காஷ்மீரின் தெருக்களில் ரத்த ஆறு ஓடுகிறது, அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள். சமீபத்தில் ஒரு முதியவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

அவருடன் வந்த சிறுவன், தனது தாத்தா இறந்துவிட்டது கூட அறியாமல் அவர் மீது அமர்ந்துகொண்டு எழுப்ப முயன்ற காட்சி தேசத்தை உலுக்கியது. இதுபோன்ற காட்சிகளை சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான்,சோமாலியா ஆகிய நாடுகளில்தான் பார்க்க முடியும். இப்போது ஜம்மு காஷ்மீரில் பார்க்கிறோம்.

இந்தக் காட்சியை பல மத்திய அமைச்சர்கள் கூட ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்கள். இது மத்திய அரசின் நிர்வாகக் குறைவு, திறமையின்மை என்பதை அந்த மத்திய அமைச்சர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தப் புகைப்படம் தேசத்தின் தோற்றத்தையும் உலக அளவில் மோசமாக்கி, மத்திய அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் குழந்தையை ஒரு வீரர் காப்பாற்றிச் சென்றுவிட்டார், இப்போது காப்பாற்றிவிட்டார், எதிர்காலத்தில் காப்பாற்ற முடியுமா?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தபின், தொடர்ந்து தீவிரவாதம் அதிகரித்து நமது வீரர்கள் வீரமரணம் அடைந்து வருகிறார்கள்.

காஷ்மீரின் பூர்வீகக் குடிமக்களான பண்டிட்கள் இன்னும் அங்கு செல்ல முடியவில்லை. கடந்த மாதம் கூட பண்டிட் ஒருவரை தீவிரவாதிள் சுட்டுக்கொன்றனர்.

கடந்த 6 மாதங்களாக காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. நம்முடைய வீரர்கள் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை ஒழித்தும், நமது வீரர்கள் உயிரிழப்பது குறையவில்லை''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Noteban370 moveNo change in J&K situationJammu and KashmirTerror-affected Union Territory.Article 370The Shiv Senaசிவசேனா370 பிரிவு நீக்கம்ஜம்மு காஷ்மீர்பணமதிப்பு நீக்கம்தீவிரவாத தாக்குதல்இந்திய வீரர்கள் உயிரிழப்புமத்திய அரசுக்கு சிவசேனா கேள்விஜம்மு காஷ்மீர் சூழல் மாறவில்லை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author